
தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. இத்தகைய சூழலில் தான் இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 09ஆம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 12ஆம் தேதி ஆகும். வாக்கெடுப்பு ஜூன் 19ஆம் தேதி காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 19ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இத்தகைய சூழலில் தான் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. எனவே தி.மு.க. வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பி. வில்சன், திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், “2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏக மனதாக முடிவு செய்து அறிவிக்கிறது. மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.