Advertisment

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர்.. போராட்டம் நடத்தும் நகரச் செயலாளர்.. அமைதி காக்கும் மாவட்டச் செயலாளர்!

Kallakurichi ADMK  candidate want to be  change

அதிமுக சார்பில், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் (தனி) தொகுதியில், கட்சித் தலைமையிடம் சீட்டு கேட்டு அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ. பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தங்கபாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செந்தில்குமார், இளைஞரணிச் செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், ஓட்டுநர் அணிச் செயலாளர் செந்தில் குமாரை வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து, 'அவர் மக்கள் மத்தியில் அறிமுகமும், செல்வாக்கும் இல்லாதவர். எனவே, அவரை வேட்பாளராக நிறுத்தினால் தோல்வி நிச்சயம். வேட்பாளரை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அவருக்குப் பதிலாக கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் பாபுவின் மனைவி அழகுவேல் பாபுவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும்'என்று அவரது கணவர் பாபு தலைமையில், 500-க்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால், டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அதனால் மீண்டும், அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகரச் செயலாளர் பாபு திடீரென மயங்கி விழுந்தார். பிறகு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு, காவல்துறையிடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேபோல், வேட்பாளரை கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும். இல்லையென்றால், 150க்கும் மேற்பட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்வோம் என்றும்தெரிவித்தனர். இப்போராட்டம் மூன்று நாட்களாக நடைபெற்றுவந்தது. இந்தப் போராட்டம் குறித்து மாவட்டச் செயலாளர் குமரகுரு, எதையும் கண்டுகொள்ளவில்லை என்றும், போராட்டம் நடத்திவரும் கட்சிக்காரர்களிடம் பேசவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டம் குறித்து அம்மாவட்ட அதிமுகவினரிடம் விசாரித்தபோது, மறியலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் பாபு,மாவட்டச் செயலாளர் குமரகுருவின் அதிதீவிர விசுவாசியாக இருந்தவர். குமரகுருவின் ஆதரவினால் இவரது மனைவிக்குத்தான் வேட்பாளர் சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்துள்ளார். ஆனால், அவரது மனைவிக்கு சீட் கிடைக்காமல் போகவே பாபுவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் குமரகுரு மீது கோபம் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், பாபுவின் மூலம் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர். அவருக்கு கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் பெரிய அளவிற்குத் தொடர்பு இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவர், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர் வெற்றி பெறுவார். தற்போது அந்த நிலை இல்லை. தொகுதியிலுள்ள வாக்காளர்கள், வேட்பாளரின் தகுதி, செயல்பாடுகள், செல்வாக்கு என அனைத்தையும் எடை போடுகிறார்கள். எனவே, வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று இப்போராடங்களை நடத்திவருகின்றனர்" என்கிறார்கள். கள்ளக்குறிச்சி நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம்அனுப்பியுள்ளதாகவும் கூறுகின்றனர். வேட்பாளரை மாற்றக் கோரும் பிரச்சனை கள்ளக்குறிச்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Advertisment

இது ஒருபுறமிருக்க, திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்குவேட்பாளராக, காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணிரத்னத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடத்திலும் அக்கட்சியின் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மீது அதிருப்தி நிலவிவருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குறித்து அத்தொகுதி காங்கிரஸார் கூறுகையில், "கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட பலபேர் உள்ளனர். அப்படி இருந்தும், வேறு மாவட்டத்திலிருந்து வேட்பாளரை இங்கு கொண்டுவந்து நிறுத்த வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்புகின்றனர். இரு கட்சியிலும் வேட்பாளர் நியமனத்தில் சொதப்பி இருப்பதாக அத்தொகுதி வாக்காளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

tn assembly election 2021 kallakurichi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe