
கள்ளக்குறிச்சியில் பள்ளி பருவத்தில் தான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி பங்குபெற்றார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''யூபிஎஸ்சி சர்ச்சைக்குரிய கேள்விகளால் மத்திய அரசை சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். ஆளுநர் ஒப்புதல் தராமல் வைத்திருந்த சட்டமன்ற சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை உச்சநீதிமன்றமே தலையிட்டு அனுமதி வழங்கியது. அது நடந்த பின்னரும் தொடர்ந்து அவர் ஆளுநராக இருப்பது முறையற்றது. ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். ஆளுநர் பதவியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். மதம், மொழி, கடவுள் இவற்றின் பெயரால் அரசியல் செய்வது பிழைப்பாகிவிட்டது. இப்படி செய்யக்கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் அயோத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு என்பதனை பிஜேபி உணர வேண்டும்.
பிஜேபி-அண்ணா திமுக கூட்டணியை அமித்ஷா அறிவிக்கும் பொழுது ஒரு கைதியை போல் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு மாலை மரியாதை அணிவித்து கௌரவித்தார். ஆனால் கூட்டணிக் கட்சியின் தலைவருக்கு அந்த மரியாதை எதையும் அமித்ஷா செய்யவில்லை. பிஜேபியுடன் எப்போதும் கூட்டணியே இல்லை என்று சொல்லி வந்த பழனிசாமி இப்போது அதை மாற்றிக் கொண்டு பணிந்து சரண்டர் ஆகிய ஒரு காட்சியை பார்க்க முடிந்தது. பழனிசாமி அணியில் இருக்கின்ற இரண்டாம் கட்ட தலைவர்களோடு எந்த ஆலோசனையும் செய்யாமல் தான் அந்த கூட்டணி நிகழ்ச்சி நிறைவேறியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படை தன்மையோடு அறிவித்து டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து தமிழகத்துக்கு திரும்பினார். எடப்பாடி பழனிசாமி திருட்டுத்தனமாக டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததுபோல் இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் தமிழக முதல்வர் சந்தித்துள்ளார்.
என்னிடம் சமாதானத்திற்கு வெள்ளை கொடியும் இல்லை ஆதரிப்பதற்கு காவி கொடியும் இல்லை என்று பதிலளித்தார். இது வரவேற்கத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே அதிமுக அவரது அணி தொடருமே ஆனால் 2026 தேர்தலில் எங்கும் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. டெபாசிட் இழக்க நேரிடும். பழனிசாமி தலைமையை எப்பொழுதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரை தலைமையில் இருந்து அகற்ற வேண்டும். அப்பொழுது தான் கட்சியில் ஒரு ஒற்றுமை ஏற்படும்.
டாஸ்மாக் ஊழலை பொறுத்தவரை அதை ஆரம்பித்து வைத்தது எடப்பாடி ஆட்சியில் தான். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். செந்தில் பாலாஜிக்கு நான் ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது அமலாக்கத்துறையை பொறுத்தவரை உச்சநீதிமன்ற விடுமுறைக்கு பின்னர் ஊழல் நடந்திருந்தால் அதை உச்சநீதிமன்றத்தின் முன்னர் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிஜேபி முன்னாள் தலைவரை பிஜேபி நீக்கியதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பிஜேபி கட்சி முழுவதுமாக காணாமல் போன காட்சியை பார்க்க முடிகிறது. முன்னாள் பாஜக தலைவரை நீக்கியது அந்த கட்சிக்கு பெரும் இழப்பு.
முதல்வர் ஸ்டாலின் புத்திசாலியின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம் பழனிசாமி போன்ற முட்டாள்கள் கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்கிறார் என்பதுதான் எனக்கு புரியவில்லை'' என்றார்.