கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும், இன்று அவரது நினைவைப் போற்றி வருகிறது. அங்கங்கே கலைஞரின் திருவுவப் படத்தை வைத்து பொதுமக்களும் தி.மு.க.வினரும் மலரஞ்சலி செய்து வருகின்றனர். அதேபோல், முகநூல், வாட்ச்-அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இன்று கலைஞரே நீக்கமற நிறைந்திருக்கிறார்.கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், 'எப்பிறப்பில் காண்போம் இனி?' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisment

kalaignar

ஒரு நிமிடம் கூட

ஓய்வெடுக்கத்தெரியாத நீ

ஓராண்டாய் என்ன செய்கிறாய்?

.

நீ எழுதவேண்டிய எழுத்துக்கள்

உன் விரல் தேடித்தவிக்க

நீ ஆற்றவேண்டிய பொழிவுகள்

உன் குரல்தேடி அலைகின்றன.

.

நீ தலைமை ஏற்கவேண்டிய

போராட்டங்களும்

வரிசைகட்டி நின்று

உன் கண்ணசைவுக்கு

ஏங்குகின்றன.

.

இப்போதும்

உன் தலைமாட்டில்

காத்திருக்கிறது

ஒரு வருடமாய்

நீ புரட்டாத முரசொலி.

.

என்றாவது ஒருநாள்

ஓரதிசயம் நடக்கும் என்ற

நம்பிக்கையிலும்

உன் முகம் பார்க்கும் ஆசையிலும்

அன்றாடம் வந்து வந்து

உன் காலடியில்

அமர்ந்துவிட்டுப் போகிறார்கள்

உன் உடன்பிறப்புகள்.

.

சூரியத்தலைவனே!

உன்னைக் கிழக்கில்தான்

விதைத்தோம்;

மீண்டும் எழுவாய்

என்ற நம்பிக்கையோடு.