Skip to main content

“கலைஞரின் பிறந்தநாளை தமிழ்செம்மொழி நாளாக அறிவிக்க வேண்டும்” - காங்கிரஸ் கமிட்டி எம். கிருஷ்ணசாமி வேண்டுகொள்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

"kalaignar birthday should be declared as Tamil semmozhi day" - Congress Committee M. Krishnasamy request

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். கிருஷ்ணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவப் படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்படும் என்ற செய்தி கேட்டு உள்ளம் மகிழ்ந்தேன். எத்தனையோ தலைவர்களுக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர். சென்னை கடற்கரையில் ஒவ்வொரு வரலாற்று தலைவர்களுக்கும் தனித்தனியாக சிலை அமைத்து அவர்களின் வரலாற்றை அறிய செய்தார். வான்புகழ் போற்றும் திருவள்ளுவர்க்கு கோட்டம் அமைத்தார். கன்னியாகுமரியில் கடல்நடுவில் ஆளுயர சிலை அமைத்து, குறளோவியம் படைத்தவர். நமது கலைஞர் அவர்கள் ‘நெஞ்சுக்கு நீதி’ எழுதினார், திரைப்படம் மூலம் பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை உருவாக்கி இரண்டு மாபெரும் நடிகர்களை வெளியுலகத்திற்கு கொண்டுவந்ததின் மூலம் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.

 

சட்டமன்றத்தில் வரலாற்று தலைவர்களுக்கு படம் இருக்கிறது என்றால், அதற்கு வித்திட்டவர் கலைஞர். அந்த வரிசையில் அவரது திருவுருவப் படமும் இந்திய குடியரசுத் தலைவரால் திறக்கப்படுகிறது. கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து தன்னுடைய மதி நுட்பத்தால் இந்திய தலைவர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக, மூத்த தலைவராக திகழ்ந்தார். இந்திய திருநாட்டில் எத்தனையோ பிரதமர்கள், குடியரசு தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் கலைஞர். 1980ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் மாபெரும் கூட்டத்தில் 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று அழைத்து, அன்னை இந்திராகாந்தியை தேர்தலில் வெற்றிகொண்டார். அதேபோன்று  'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நிலையான ஆட்சி தருக' என்று சோனியா காந்தியை கூறி காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைய துணை நின்றவர் கலைஞர்.

 

இந்திய வரலாற்றில் முதன்முதலாக ஒரு பெண் பிரதிநிதி பிரதிபா பாட்டீல் குடியரசு தலைவராக வந்தார் என்றால் அதற்கு முழுமுதல் காரணம் கலைஞர். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ‘கல்வி வளர்ச்சி நாளாக’ அறிவித்து மாணவர்களுக்கு என்றும் அவரது வரலாற்று நினைவுகளை போற்றும் வகையில் செய்தவர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சமபங்கும் பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்து செயலாக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்க செய்தவர்தான் நமது கலைஞர். மனிதனே மனிதனை கை ரிக்க்ஷாவில் இழுத்து செல்வதை ஒழித்தார். முதியோர் ஓய்வு இல்லம், அவர்களுக்கு இலவச கண் கண்ணாடி, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், குடிசையை ஒழித்து ‘குடிசை மாற்று வாரியம்’ அமைத்து ஏழைகளையும் மாடி வீட்டில் அமர்த்தினார். இப்படிப்பட்ட புரட்சிகரமான திட்டங்களை கொண்டுவந்ததில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். மாநில உரிமைகளை கட்டி காத்தவர். சமதர்ம சமூகநீதி ஆட்சியை நிலைநாட்டியவர்.

 

"kalaignar birthday should be declared as Tamil semmozhi day" - Congress Committee M. Krishnasamy request

 

சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களே கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்து வரலாற்று சாதனை புரிந்தார். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக திகழ்ந்தார். இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தமிழகத்தில் முதன்முதலாக தனி அமைச்சகம் அமைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். நாட்டிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் தோழனாக திகழ்ந்தார். உழவர் சந்தை, பெரியார் சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து ஏழை - எளிய பாட்டாளி மக்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் நமது கலைஞர். தமிழக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தார். பாலங்கள் என்றால் இன்றளவும் ஞாபகம் வருவது கலைஞர்தான். தனியார் பேருந்து போக்குவரத்தை அரசுடமையாக்கினார். இப்படி அவர் செய்த திட்டங்கள், சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு நாட்கள் போதாது, எழுதிக்கொண்டே போகலாம் .  

 

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் என்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அன்னை சோனியா காந்தி நியமித்தார். சட்டமன்ற தேர்தலில் கலைஞர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணி தலைவராகயிருந்த அவரோடு இணைந்து பணியாற்றிய நினைவுகளை எந்நாளும் நினைத்து பெருமைப்படுகிறேன். திருத்தணி எல்லை போராட்ட வீரர் எனது மாமானார் திருத்தணி கே. விநாயகம் மீது எப்படி பற்றும் பாசமும் கலைஞர் வைத்தாரோ அதே அளவுக்கு என்மீதும் அன்பு கொண்டிருந்தார். என் மகன் M.K விஷ்ணுபிரசாத் MBBS சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் அன்பை காட்டினார். மூன்று தலைமுறை மட்டுமல்ல நான்கு தலைமுறை அரசியல்வாதிகளை கண்ட ஒரே முதலமைச்சர் கலைஞராக மட்டும்தான் இருக்க முடியும். நான் தலைவராகயிருந்தபோது ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவிற்கு சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்தேன், வந்தார். 

 

நான்,  பழைய மகாபலிபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கையை வைத்தேன். மேடையிலேயே முதலமைச்சர் என் கோரிக்கையை ஏற்று ராஜீவ் காந்தி சாலை என்று அறிவித்தார். அது என்றும் வரலாறு பேசும். மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் ராஜீவ் காந்தி திருப்பெயரை சூட்டி பெருமைப்படுத்தினார் கலைஞர். அன்னை சோனியா காந்தியை தனது மகள் போல அன்பு செலுத்தினார். பேரறிஞர் அண்ணா காட்டிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து, ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அண்ணா துயில்கொண்டிருக்கும் அருகிலேயே கலைஞரும் துயில்கொண்டுயுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் கலைஞர். அவருடைய திருவுருவப் படம் தமிழக சட்டமன்றத்தில் திறப்பதின் மூலம் தமிழக சட்டமன்றம் மேலும் பெருமையடைகிறது. 

 

கலைஞர் திராவிடத்தின் மீது மிகுந்த பற்றுகொண்டவராக இருந்தாலும், அவர் தேசியத்தின் மீதும் பொதுவுடைமை கொள்கையிலும் பிடிப்புகொண்டவர். தமிழகம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் கலைஞரின் பங்கு அளவிட முடியாதது. தமிழுக்காகவே வாழ்ந்த கலைஞர் பிறந்தநாளை ‘தமிழ்செம்மொழி நாளாக’ அறிவிக்க வேண்டும். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அனைவரும் பாராட்டும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.