Skip to main content

தினகரனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: கடம்பூர் ராஜூ 

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
 

அவர் கூறுகையில், சென்னையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலையை ஜெயலலிதா நிறுவினார். தற்போது கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது போன்று, சென்னையிலும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோனின் அரண்மனை சீரமைக்கப்படும். அவரது வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 


 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த போலீஸ் நிலையங்களாக கோவை, சென்னை போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளை பெற்றுள்ளன. சில இடங்களில் உணர்ச்சியின் காரணமாக ஆணவக்கொலைகள் நடந்தாலும், அதனையும் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றச்செயல்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.
 

மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான், நீட் தேர்வு குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது நீட் தேர்வினை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வுக்கு வித்திட்ட காங்கிரஸ், தி.மு.க.வால்தான், தற்போது நீட் தேர்வினை அமல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டு உள்ளது. 

 

kadambur raju - ttv dhinakaran


கடந்த ஒரு வாரமாக சட்டசபையில் நீட் தேர்வு குறித்து விவாதம் நடந்து வருகிறது. ஆனால் டி.டி.வி.தினகரன் அங்கு வந்து கருத்து சொல்லவில்லை. சட்டசபைக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றாமல், வெளியில் இருந்து அவர் சொல்லும் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும். அதன்பிறகும் அ.தி.மு.க. ஆட்சிதான் என்றும் தொடரும். இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.