Advertisment

ராகுல்காந்தி பகிரங்கமாக அறிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்: கே.எஸ். அழகிரி

ddd

2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், 25 சட்டமன்றத் தொகுதிகளை பெற்றது. மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள குமரி நாடாளுமன்றத் தொகுதியையும் பெற்றது.

Advertisment

இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒப்பந்தம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிறைவேறியிருக்கிறது. மத்திய பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இயங்கும் அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டதே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க. 5 லட்சம் வாக்குகள், அதாவது, 1.1 சதவிகித கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சி அமைத்தது. அதேபோல, 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை விட 60 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று 54 சதவிகித வாக்கு வங்கியோடு 39 தொகுதிகளில், 38 இடங்களில் வெற்றி பெற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இமாலய சாதனையைப் பெற்றது.

இந்தப் பின்னணியில் தான், 2021 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் எதிர்கொள்ள இருக்கின்றன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கொள்கையின் அடிப்படையிலானது. எண்ணிக்கையின் அடிப்படையிலானது அல்ல. தமிழக மக்கள் நலன்சார்ந்து, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டுமானால், பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிற அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

நேற்று, தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும் போது, பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜீவா ஆகியோர் விரும்பிய சமத்துவ ஆட்சியை நிச்சயம் அமைப்போம் என்று சூளுரை மேற்கொண்டதை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் பல திருப்பங்களை உருவாக்கிய திருச்சி, மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்திருக்கிறது.

திருச்சி பொதுக்கூட்டத்தில், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கமாக 7 உறுதிமொழிகளை மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு அறிவித்திருக்கிறார். நவீன தமிழகத்தை உருவாக்குகிற நோக்கத்தில், தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைத்த அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைக்கிற நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையோடு உறுதிமொழிகளை அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

சமீபகாலமாக, எந்த திசையில் செல்கிறோம் என்று ஆட்சியாளர்களுக்கே புரியாமல் ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருந்ததால், தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவார்கள். இந்நிலையில், 7 கோடி மக்களின் இதயங்களை வெல்வதற்கு 7 தொலைநோக்குத் திட்டங்கள் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படுகிற வகையில், மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் வழிமொழிய, தமிழக விடியலுக்கான உறுதிமொழிகளை எடுத்திருக்கிறார். அந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் வருகிற சட்டமன்றத் தேர்தலை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

dmk

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களில் இருந்தும், 7 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் ஜனநாயக விரோத வகுப்புவாத அரசியலில் இருந்தும் தமிழகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பிரதான பங்கு வகிக்கிற காங்கிரஸ் கட்சி தீவிரமான முனைப்புடன், தோழமை உணர்வுடன் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மக்களவை தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட ராகுல்காந்தி 2021 சட்டமன்றத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டு விட்டது. குறிக்கோள் அறிவிக்கப்பட்டு விட்டது. நோக்கம் தெளிவாக இருக்கிறது. செயல் திட்டம் தயாராகி விட்டது. மத்திய பா.ஜ.க. ஆட்சியின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கிற ஊழலில் ஊறித் திளைத்த அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே தமிழக காங்கிரசின் ஒரே நோக்கம், ஒரே குறிக்கோள்.

அந்த நோக்கத்தை அடைவதற்கு தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் இன்று முதல் கண் துஞ்சாமல், அயராமல் கடமை உணர்வோடு மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்கும் மகத்தான லட்சியப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

stalin Rahul gandhi Alliance congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe