Skip to main content

மீண்டும் உடையும் அ.தி.மு.க.! கே.சி.பழனிச்சாமி அட்டாக்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

K P Palanisamy comment about admk party


அ.தி.மு.க. தலைமைகளுக்கு எதிராக அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி போட்டிருக்கும் வழக்கு வருகிற 18ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சில அதிரடிகள் உருவாகலாம் என்கிற பேச்சு பரவிவரும் நிலையில், கே.சி.பழனிச்சாமியிடம் இதுபற்றி நாம் பேசியபோது, ரஜினியின் அரசியல் வருகைக்கு பின்னணியில் பா.ஜ.க. தலைமையின் அழுத்தங்களும் ஆலோசனைகளும் அதிகமாகவே இருக்கின்றன. அதனால்தான் பா.ஜ.க.வில் இருந்த ஒருவரை (அர்ஜுனமூர்த்தி) தனது கட்சிக்கான பணிகளுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க முடிகிறது.

 


அரசியலுக்கு வரமட்டேன் என முடிவு செய்திருந்த அவரை, பா.ஜ.க.வை தவிர வேறு எவராலும் இழுத்து வந்திருக்க முடியாது. அந்த வகையில், ரஜினி, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.நீ.ம., த.மா.கா., அ.ம.மு.க. கட்சிகளை இணைத்து ஒரு மெகா கூட்டணியை மோடியும் அமீத்ஷாவும் உருவாக்கக்கூடும். மேலும், தேவைப்பட்டால் ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வை உடைத்து எடப்பாடியை தனிமைப்படுத்தும் யோசனையும் பா.ஜ.க.விடம் இருப்பதாகத்தான் டெல்லியிலிருந்து எனக்கு தகவல் கிடைக்கிறது. அதனால்தான் ரஜினியுடன் கூட்டணி அமையலாம் என ஓ.பி.எஸ். சொன்னது. அந்த வகையில் எனது வழக்கு பா.ஜ.க.வுக்கு ஒரு சாதகத்தை ஏற்படுத்தலாம்.

 

அதாவது, அ.தி.மு.க.வின் சட்டவிதிகளின்படி கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள் அனைவரும் வாக்களித்துதான் தேர்ந்தெடுக்க முடியும். கட்சி தொண்டர்களின் அடிப்படை உரிமை. இது. இதற்கு மாறாக, பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது செல்லாது  என அறிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் வழக்கு போட்டிருக்கிறேன். அது இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே, இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி, பன்னீர் தலைமைக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலாவும் தினகரனும் போட்ட வழக்கில் எனது கருத்தையும் இணைக்க வேண்டும் என நான் மனு செய்திருக்கிறேன்.

 


இந்த வழக்கில், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொண்டர்களின் அடிப்படை உரிமை என டெல்லி உயர்நீதிமன்றம் சொன்னதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் நான் தீர்ப்பளிக்குமாறு மனு செய்தபோது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் முடிவாகாததால் எனது மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என சொன்னது ஆணையம். இதை எதிர்த்து டெல்லி ஹை-கோர்ட்டில்  நான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன். இதன் இறுதிக்கட்ட விசாரணை 18ஆம் தேதி வருகிறது. இந்த விசாரணை பல அதிரடிகளை இனி உருவாக்கும்.

 


பாஜக நினைத்தால் அ.தி.மு.க. சின்னத்தை முடக்கி, கட்சியை இரண்டாக  உடைத்து விட முடியும். அ.தி.மு.க.வுக்கு எதிராக எந்த மாதிரியான அரசியலை பா.ஜ.க. திட்டமிடுகிறது என்பதைப் பொறுத்து எடப்பாடி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஊழல் அமைச்சர்களின் எதிர்காலம்  இருக்கப் போகிறது. என்கிறார் மிக  அழுத்தமாக.

 


ரஜினியை வைத்து ஆட்டத்தை துவக்கியிருக்கிறது பா.ஜ.க. இனி அடுத்தடுத்த நாட்களில் தகிக்கப் போகிறது தமிழக தேர்தல் களம்!
 

 

 

சார்ந்த செய்திகள்