Skip to main content

ரயில் மறியலில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன் கைது

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

 

எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அட்டவணை 9-ல் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

 

 

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்ட அக்கட்சியினர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இறங்கி இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

படங்கள்: குமரேஷ்
 

சார்ந்த செய்திகள்

Next Story

கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றிய சூர்யா

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Surya fulfilled the request of the Communist Party

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர். 

 

அந்த வகையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் ராஜாக்கண்ணு மனைவிக்கு உதவி செய்யுமாறு நடிகர் சூர்யாவிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கே. பாலகிருஷ்ணன் கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

ad

 

அதில், ‘வணக்கம் தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். ‘ஜெய் பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக  ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்ற வரையில் திரைப்படத்தில்  முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும்   பதிவு செய்திருக்கிறோம்.

 

மேலும் மறைந்த திரு. ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் ‘பத்து இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

 

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்காக உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின்  முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள் " என குறிப்பிட்டுள்ளார்

 

 

Next Story

அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்... கே.பாலகிருஷ்ணன்

Published on 04/12/2020 | Edited on 04/12/2020
K. Balakrishnan

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழ்நாடு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. செயற்குழுக் கூட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,  

 

"நவம்பர்-26 ஆம் தேதி முதல் "டெல்லிக்கு செல்வோம்"(டெல்லி சலோ) என்ற முழக்கத்தினை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மகாராஷ்ட்ரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

 

மத்திய பாஜக அரசு அனைத்து திசைகளிலிருந்தும் வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளது. இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயிலில் அதே இடத்தில் தங்கியிருந்து வெட்ட வெளியில் உண்டு, கழித்து, உறங்கி எட்டு நாட்களாக மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்திருத்த மசோதா 2020ஐயும் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்ப மாட்டோம் எனப் போராடி வருகின்றனர்.

 

பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. மோடி தலைமையிலான அரசைக் கண்டிக்கும் வகையிலும் போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையிலும் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து இந்திய விவசாயிகளை கார்பரேட் அடிமைகளாக மாற்றும் 3 வேளாண் விரோத சட்டங்களையும், வேளாண்மைத் தொழிலுக்கு உயிர் நாடியாக இருக்கும் மின்சாரத்தை வணிகப் பண்டமாக்குகிற மின் மசோதா2020 ஐயும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

 

இந்தச் சட்டங்களால் தமது வாழ்வாதரம் முற்றாக அழிந்து விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. வாட்டுகிற கடுங்குளிரில் வெட்ட வெளியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

 

இவ்வாறு பிரதமர் மோடியின் அரசு அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களின் கொள்ளைலாபத்திற்காக மட்டுமே செயல்படுவதால் இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை டிசம்பர் 5/2020 அன்று இந்தியா முழுவதும் எரித்து, எதிர்ப்பு தெரிவிப்பதென AIKSCC அகில இந்திய செயற்குழு அறிவித்துள்ளது. 

 

AIKSCCயின்  தலைமைக்குழு முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோர் உருவபொம்மைகள் எரிப்புப் போராட்டம் நடத்துவது. டிசம்பர் 9/2020 முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம்.

 

வாட்டும் குளிரில் வதைபட்டு வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி பாஜக தலைமையிலான இந்திய அரசு தீர்வு காண வேண்டும். இந்திய விவசாயிகளை கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தும் 3 வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் துணை செய்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

 

இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர்-9 /2020 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர்காத்திருப்புப் போராட்டம் தொடங்குவது. 

 

விவசாயிகளின் நியாயமான இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து சிவில், சமூக, அரசியல் இயக்கங்களும் மற்றும் மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் முழுஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.