ADVERTISEMENT

“சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்தது..” - சி.வி.சண்முகம்

04:17 PM Jun 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, சமீப நாட்களாக தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவினருடன் ஆங்காங்கே செல்போன் மூலம் பேசி நலம் விசாரிப்பதும், கட்சி வீணாவதை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற நான் வருவேன். கரோனா நோய் பரவல் குறைந்த பிறகு உங்களை சந்திப்பேன் என கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சுமார் 15 கட்சி நிர்வாகிகளை கட்சியிலிருந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் நீக்கியுள்ளனர்.


இதையடுத்து மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளை அழைத்து தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ச்சுனன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “சசிகலா குடும்பத்திற்கும் இந்த இயக்கத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் ஒரு நாடகத்தை தினந்தோறும் தொலைபேசி மூலமாக நடத்திக் கொண்டு வருகிறார். ‘நான் வருகிறேன், இதோ வருகிறேன்; அதோ வருகிறேன்’ என்று வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறார். தொண்டர்களையும் அதிமுகவையும் ஏமாற்றி விடலாம், அதன் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி கொள்ளையடிக்கலாம் என்று சசிகலா கனவு காண்கிறார்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கும் வரை எந்த காலத்திலும் அவரது கனவு நிறைவேறாது. ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமே இந்த குடும்பம் அடித்த கொள்ளையால் தான். இவர்கள் அடித்த கொள்ளை அத்தனை பழிகளையும் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. அவர் கூடவே இருந்து இந்த இயக்கத்தின் மூலம் வளர்ந்தவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் அப்படிப்பட்ட துரோகிகளை நினைவு வைத்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பலை எந்த நிலையிலும் கட்சிக்குள் நெருங்க விடக்கூடாது. சென்னையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி உங்கள் ஆதரவோடு விழுப்புரம் மாவட்ட அதிமுக அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது” என்று அறிவித்தார்.

அதை அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கட்சிக்குள் நுழைய விட கூடாது. மீண்டும் அவர்கள் கட்சிக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்துவார்கள். அவர்கள் ஆட்டத்தை தாங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் கட்சித் தொண்டர்களிடம் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, அது போன்ற நிலை அதிமுகவிற்கு இனிமேல் ஒருபோதும் வரக்கக்கூடாது என்பதில் மற்ற நிர்வாகிகளை விட ஓ.பி.எஸ். சி.வி. சண்முகம் போன்றவர்கள் உறுதியாக உள்ளனர் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். சசிகலா அதிமுகவிற்குள் ஊடுருவுவாரா? அதை கட்சித் தொண்டர்கள் விரும்புவார்களா? வெறுப்பார்களா? என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT