nanjil sambath

Advertisment

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரை சந்தித்தது, அதிமுகவில் தான் பணியாற்றியது குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத்.

''என்னுடைய அரசியல் வாழ்வு அஸ்தனம் ஆன சூழலில் எனக்கு அடைக்கலம் தந்தவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. அதிமுகவின் வரலாற்றில் கட்சியில் இணைத்துக்கொண்ட அன்றைக்கே கொள்கைப்பரப்பு துணை செயலாளர் என்ற பொறுப்பை வழங்கி நாடு முழுக்க மாநாடு, கூட்டங்கள் நடத்துவதற்கு கட்டளையிட்டு என்னிடம் கனிவோடு நடந்து கொண்டவர்.

சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவின் தலைவர் அண்ணன் ஸ்டாலினுடைய பிரச்சாரத்தை எதிர்கொள்ளக்கூடிய அந்த மகத்தான வாய்ப்பை அவர் எனக்குத்தான் வழங்கினார். நான் பயணம் செய்வதற்கு இன்னோவா கார் தந்தது மட்டுமல்ல, இரண்டு தேர்தல் பிரச்சாரத்திலும் அண்ணன் ஸ்டாலினுக்கு நிகரான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல எனக்கு மட்டும்தான் டெம்போ வாகன வசதியையும் செய்து தந்தார்.

Advertisment

nanjil sambath

அதிமுக மேடையில் நான் ஒரு புதிய அத்யாயத்தை எழுதினேன். கட்சி சார்பற்ற நடுநிலையாளர்களை அதிமுக பக்கம் இழுப்பதற்கு ஒரு வகையில் நான் கருவியாக இருந்தேன். என்னுடைய பேச்சும், என்னுடைய நடவடிக்கையும் அவர்களை மிகவும் கவர்ந்தது. என்னுடைய மகன் சரத்பாஸ்கருக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். என் மகள் மதிவதிணி திருமணத்தை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நடத்துவதற்கு அமைச்சர்களுக்கு கட்டளையிட்டு, ஐந்து திருமணம் ஆறு திருமணம் என பல திருமணங்களை முன்னின்று நடத்துபவர், அமைச்சர்களுக்கு கொடுக்காத வாய்ப்பை எனக்கு கொடுத்து, என் மகள் திருமணத்தை தனியாக நடத்துவதற்கு வாய்ப்பு அளித்து நேரில் வந்து வாழ்த்தினார்.

அவர் இருக்கும் நாள் வரை ஒரு தாயின் பரிவை என்னிடத்தில் காட்டினார். அவருடைய கருணை எனக்கு ஒரு நம்பிக்கையும், வாழ்க்கையும் தந்தது என்பதை அருவடைய நினைவு நாளில் நினைத்துப் பார்க்கிறேன்.

Advertisment

ஒரு கம்பீரமான ஆளுமை. டெல்லி ஏகாதிபத்தியத்தை துணிந்து எதிர்த்த போர்க்குணம். ராஜபச்சேவை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம். ராஜீவ்காந்தி கொலையில் கைதான தமிழர்களை விடுவிப்பதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் என்று தமிழர்களின் உரிமை காக்கின்ற அந்த களத்தில் அவர் முந்தி நின்றார். முதலில் நின்றார். முதலமைச்சருக்கெல்லாம் முதலமைச்சராக இருந்து அவர் ஆற்றிய கடமையும், எளியவன் என் மீது காட்டிய பரிவையும் நான் என்றைக்கும் மறக்க முடியாது. அவர் இல்லை. அவர் இல்லாத இயக்கத்தில் நானும் இருக்க விரும்பவில்லை. நான் வெளியேறிவிட்டேன். அவர் எனக்கு பயன்படுத்த தந்த காரை இன்றைக்கு என்னிடம் இருந்து பறித்துக்கொண்டார்கள். நான் இப்போது ஒரு சராசரி பயணியாக பயணித்தாலும் என்னுடைய நினைவுகளை பின்னோக்கி பார்க்கிறபோது அவரோடு நான் பணியாற்றிய காலம் என்னுடைய வாழ்வின் வசந்தகாலமாக இருந்தது என்பதை மறக்க முடியாது''.