Skip to main content

“போராடியவர்கள் மீது தடியடி நடத்தியவர் ஜல்லிக்கட்டு நாயகனா?” - ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த ஜெயக்குமார்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

"Is the jallikattu hero the one who caned the people?" - Jeyakumar criticized OPS
கோப்புப் படம்

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் பகுதியான எக்கியர்குப்பம் அருகே இருக்கும் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேரும் என தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப்பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஆகியவை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வரும் 22ம் தேதி சின்னமலை பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் மனு அளிக்கவுள்ளனர். இதற்கான அனுமதி கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். 

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. தன்னை தானே ஜல்லிக்கட்டு நாயகன் என சொல்லி கொள்ளும் ஓ.பி.எஸ். கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். 

 

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மெரினாவில் போராடியதன் விளைவாக மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியது. குறிப்பாக போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது குடியரசு தின விழாவும் வந்தது. அப்போது குடியரசு தின விழாவை தன் தலைமையில் முதலமைச்சர் எனும் பதவியில் நடத்த நினைத்த ஓ.பி.எஸ். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸுக்கு உத்தரவிட்டு தடியடி நடத்தினார். இவர் ஜல்லிக்கட்டு நாயகனா? இந்தப் போராட்டத்தில் அப்பகுதி மீனவ மக்கள் கடும் பொருள் சேதத்தைச் சந்தித்தனர்” என்று பேசினார். 

 

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள், ‘அன்று அமைச்சராக இருந்த நீங்கள் அவர் செய்தது தவறுதான் என்றால் அவருக்கு அன்றே எதிர்ப்பு தெரிவித்திருக்கலாமே’ எனக் கேட்டனர். அதற்கு அவர், “இப்ப கேள்வி கேட்டீங்கனு சொல்றேன்.. அப்ப இந்தக் கேள்வியை கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.