Skip to main content

ராகுலுக்கு சிறை தண்டனை; ரயில் மறியலில் கே.எஸ்.அழகிரி

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்தத்  தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷங்களையும் எழுப்பினர். அதேபோல் கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ராகுல் காந்திக்கு திட்டமிட்டே மத்திய அரசு நெருக்கடியை கொடுத்து வருகிறது என காங்கிரஸ் உறுப்பினர்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்திபவனில் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ராகுல்காந்தி உரையில் ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு அவரை குற்றவாளி என அறிவித்திருப்பதாக செய்திகள் வருகிறது. நீதிமன்றத்தின் முழுமையான கருத்துகள் எனக்கு கிடைக்கவில்லை. சூரத்தில் அவர் பேசியதை படித்தேன். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. குற்றம் செய்தவர்களுடைய பெயர்கள் எல்லாம் மோடி என்னும் பெயரில் முடிகிறது என அவர் சொன்னார் என்பதாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது குற்றம் எனச் சொல்ல முடியாது. மோடி என்ற சமூகம் இந்த தவறுகளுக்கு பின்னால் இருக்கிறது என்று சொன்னால் அதைத் தவறு எனச் சொல்லலாம். ஆனால், இதில் இரண்டும் இல்லை. 

 

அதனால் நீதிமன்றம் இதை எப்படி எடுத்துக்கொண்டுள்ளது; அரசுத் தரப்பு வழக்கறிஞர் எப்படி வாதாடியுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. பாஜக ராகுல் காந்தியை அப்புறப்படுத்த நினைக்கிறது. அவரை நசுக்க நினைக்கிறது. பாஜகவின் குறைகளைச் சொன்னால் அது தேசத்திற்கு விரோதமானதா. இந்தியா என்பதே பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தானா? அதானிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைச் சொன்னால் தேசத்துரோகி எனச் சொல்கிறார்கள். இந்தியா என்பது அதானி தானா? ஜெர்மனியில் ஹிட்லர் எதைச் செய்தாரோ அதையே இவர்களும் இங்கே செய்கிறார்கள்” எனக் கூறினார்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “நாட்டின் விடுதலைக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர் நேரு. சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை சென்ற குடும்பம். அந்த குடும்ப உறுப்பினர் மீது இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளார்கள். நாட்டில் ஏதாவது பிரச்சனை என்றால், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்த நாட்டின் இறையாண்மைக்கு, இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து வருகிறார்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்