Jagadish Shetter, who did the unsaid; Shock after shock for Karnataka BJP!

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Advertisment

ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதே நேரம் கூட்டணி குறித்த பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட உள்ள 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவெளியிட்டது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 8 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவன் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

Advertisment

Jagadish Shetter, who did the unsaid; Shock after shock for Karnataka BJP!

சில தினங்கள் முன் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க் தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக உள்ள மகாதேவப்பா யாதவுக்கு, நேற்று முன்தினம் வெளியான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாஜகவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், முழக்கங்களையும் எழுப்பினர். மேலும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த சிக்க ரேவனாவுக்கு ராம்துர்க் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெலகாவி வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அனில் பெனகேவுக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாத பாஜக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அதானி தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமணன் சவுதி ஏற்கனவே அறிவித்திருந்தார். நேற்று பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்த லட்சுமண சவுதி காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார்.

லட்சுமண சவுதி அதானி தொகுதியில் 3 முறை நின்று வெற்றி பெற்றவர். கடந்த 2018 ஆம் ஆண்டு அதானி தொகுதியில் லட்சுமண சவுதியை எதிர்த்து போட்டியிட்ட மகேஷ் குமட்டஹள்ளி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இந்நிலையில் இம்முறை மகேஷ் குமட்டஹள்ளிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. இதனால் லட்சுமண சவுதி காங்கிரஸில் இணைந்தார்.

இதனிடையே நேற்று கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவரானஜெகதீஸ் ஷெட்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். ஆறு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ள ஷெட்டர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியிடம் கொடுத்துள்ளார். முன்னதாக சனிக்கிழமை இரவு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு காங்கிரஸில் இணைந்துள்ளார் ஜெகதீஷ் ஷட்டர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன், “சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ள ஜெகதீஷ் ஷட்டர், அதே நேரம் தன்னை தேர்தல் அரசியலிலிருந்து விலக்கும்படி கட்சி தலைமை வற்புறுத்துவதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு நாட்களே உள்ள நிலையில் இறுதி நேரத்தில் அரசியலை விட்டு விலக நிர்ப்பந்திக்கின்றனர்” எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்று உப்பள்ளி- தார்வார் மாநகராட்சி பாஜக கவுன்சிலர்கள் 16 பேர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 49 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வோம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.