Advertisment

ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரி... ஜெ. அன்பழகன் அதிரடி பேட்டி...

சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால்.

Advertisment

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,

சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேசும்போது, நன்றாக நடந்தது என்று பேசினார். நான் அதற்கு பதில் அளித்து பேசுகிறபோது, முறைகேடுகளை பட்டியலிட்டு பேசினேன். உதாரணமாக மந்திரி, கலெக்டர் முன்பாக கந்தவர்கோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் எங்களுக்கு உதவி செய்யவில்லை, எதிர்க்கட்சிக்குத்தான் உதவி செய்தாய் என்று அரசு அதிகாரி அன்வர் அலியை ஒருமையில் திட்டியதை வாட்ஸ் அப் மூலமாக இந்த உலகமே பார்த்தது. இதனை சொன்னேன். இதனால் அவர்களுக்கு எரிச்சல், தாங்க முடியவில்லை.

Advertisment

இதையடுத்து என்னை பேசவிடாமல் தடுக்க பார்த்தார்கள். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பேசுகிறார்கள். சம்மந்தப்பட்ட அமைச்சர் பேசினால் ஒத்துக்கொள்ளலாம். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கில் முதலிடம் பெற்றது என்றார். எதில் முதலிடம் பெற்றீர்கள் என்று கேட்டால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு சொல்லிவிட்டது என்கிறார்கள். எந்த மத்திய அரசு? நீங்க அடிமையாக இருக்கிற மத்திய அரசு.

ஸ்டெர்லைட் ஆலை முன்பு துப்பாக்கிச் சூடு நடந்ததே அதில் முதலிடம் கொடுத்தார்களா? சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நெல்லை கண்ணனை கைது செய்தீர்கள். குண்டு போடுவோம் காலேஜில என்று எச்.ராஜா பேசினாரே அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? நீதிமன்றம் என்ன பெரிய என்று ஒரு வார்த்தை சொன்னாரே அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? பெரியார் சிலையை உடைப்போம் என்றாரே? அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? இதுதான் சட்டம் ஒழுங்கா?

பேனர் விழுந்து ஒரு பெண் இறந்துபோனார். அது சம்மந்தமாக ஒரு அதிமுககாரரை பிடிக்க வக்கில்லை. கோர்ட் கண்டனத்திற்கு பிறகுதான் பிடித்தீர்கள். எதில் முதலிடம் நீங்க? உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் திட்டுகிறது அதில்தான் நீங்கள் முதலிடம். ஊழலில் முதலிடம்.

சிறுபான்மையினர் பாதுகாப்பு என அ.தி.மு.கவினர் நாடகமாடுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்காவிட்டால் அந்த மசோதா தோற்றுப் போயிருக்கும்.

இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு பற்றி எரிகிறதென்றால் அதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க தான். இவற்றையெல்லாம் 5 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன். என்னிடம் நிறைய குறிப்புகள் இருந்தது. அத்தனையும் பேச வேண்டுமென்றால் இருபது நிமிடங்கள் தேவை. நான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

சபாநாயகரிடம் சென்று, நான் தயாரித்த குறிப்புகளைக் காட்டி, இன்னும் 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டேன். நீங்களும் அரசியல்வாதிதான், இவ்வளவு குறிப்புகள் தயார் செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் ஆகும். நான் தயாரித்து வந்ததை பேச ஐந்து நிமிடம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது எனக் கூறினார். அவைத் தலைவரே நான் பேசக்கூடாது என்று சொன்னால், நான் யாரை நம்பி இந்த அவைக்கு வருவது. அதனால் தான், ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழித்தேன். ஆளுநர் உரை கிழிக்கிற உரை அவ்வளவுதான்.

jayalalitha

ஆளுநர் உரையை கிழித்ததால்தான் உங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆளுநர் உரையை கிழித்தது சரியா?

அது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய உணர்ச்சியைத்தான் காட்ட முடியும்.

ஆளுநர் உரையை கிழித்தது ஒரு சட்டமன்ற உறுப்பினரா...?

ஜெயலலிதா பட்ஜெட்டையே கிழித்துப் போட்டார். கலைஞருக்கு முன்பு பட்ஜெட்டை கிழித்து போடவில்லையா? அது நியாயமா? ஆளுநர் உரை குறித்து பேச அனுமதிக்கவில்லை. அப்படியென்றால் ஆளுநர் உரை எனக்கு எதற்கு? அதனால் நான் கிழித்துப்போட்டேன். இதற்கு முன் உதாரணம் ஜெயலலிதா. அதைப்பார்த்துதான் நான் செய்தேன். ஜெயலலிதா கிழித்ததால்தான் நானும் கிழித்தேன். ஜெயலலிதா செய்தது சரிதான் என்றால் நான் செய்ததும் சரிதான். அவர் செய்தது தவறு என்றால், நான் செய்ததும தவறு. இவ்வாறு கூறினார்.

assembly j anbazhagan jayalalitha
இதையும் படியுங்கள்
Subscribe