Thamizhachi Thangapandian - j anbazhagan dmk

Advertisment

ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, மறைவிற்கு தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று காலை, இப்படித் துயரம் கவிழ்ந்த கரும் பொழுதாய் விடியுமென யாரறிவார்? சென்னை மேற்கு மாவட்டசெயலாளர், சட்டமன்ற உறுப்பினர், ‘அன்பு’ என்று பாசத்தோடு தலைவர் கலைஞர், தளபதியால் அழைக்கப்பட்ட, கழகத்தின் பெருந்தூண், முன்னணிப் படைவீரர், சமரசமற்ற போராளி, அண்ணன் ஜெ. அன்பழகன் மறைந்து விட்டார்.

காலை மருத்துவமனைக்குச் சென்று, அவரது முகத்தைக் கூடப் பார்க்க இயலாத பெரு வலியோடு, அறிவாலயம் சென்று மலரஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்புகின்றேன். நீளும் இப்பாதையின் மரங்களெங்கும் மரணத்தின் வாதை...

Advertisment

நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் கழகத்தின் வெற்றிக்காக அயராது சுற்றிச் சுழன்ற அண்ணனோடு, பணியாற்றிய நாட்கள் நிழலாட... வெடிக்கிறது அழுகை.

Thamizhachi Thangapandian - j anbazhagan dmk

கழகம் ஒரு உணர்வுபூர்வமான குடும்பமென, இதுவரை நான் சந்தித்த இழப்புகளில், ஈடு செய்ய இயலாக் கொடுந்துக்கமாய், இம் மரணமும் உணர்த்த, இக்கொள்ளை நோய்க் கரோனாவைச் சபிக்கின்றேன்.

சட்டமன்றத்தில் எதிராளியைச் சமராடும் பொறுப்பான உறுப்பினர், அடித்தட்டு மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட கழகத்தின் போர்வாள், தனக்குச் சரியெனப்படுவதைத் தைரியமாக எடுத்துரைக்கும் வெளிப்படையான குணமுடையவர், மகா கலைஞன் சிவாஜியின் ரசிகர், கிரிக்கெட்விளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்டவர், கழக உடன்பிறப்பிற்கு ஒன்றென்றால் ஓடோடி வருபவர், தலைவர் தளபதி கட்டளையிட்டால் உடன் களத்தில் நிற்பவர் என அவரது ஆளுமையின் அத்தனை முகங்களும் முன் வர,மரணத்தின் இரக்கமின்மைக்கு முன் மௌனித்து இயலாதிருக்கிறேன்.

Advertisment

அணுவளவும் விசுவாசம் மாறாத இந்த மாசற்ற தொண்டரை, திராவிட இயக்க வரலாறு என்றும் நன்றியோடு நினைவிற் கொள்ளும்!கரோனா பேரிடர் காலத்தில் களப் பணியாற்றி, நம்மை விட்டுப் பிரிந்த அண்ணனுக்கு வீர வணக்கம்.இவ்வாறு கூறியுள்ளார்.