Skip to main content

“பொருளை வெளியில் வைத்து கதவைப் பூட்டுவது சாதாரண விஷயம்” - சசிகலா புஷ்பா

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

“It's normal for them to lock the door after putting things outside” - Sasikala Pushpa

 

ராஜ்யசபா எம்.பியாக சசிகலா புஷ்பா தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு டெல்லியில் தங்குவதற்காக மத்திய அரசால் நார்த் அவென்யூவில் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரது பதவிக்காலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பைக் காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும்படி அரசு சார்பில் சசிகலா புஷ்பாவிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது பதவியில் இருக்கும் அதிமுக எம்.பி விஜயகுமார் டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

 

இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி மது விருந்து நடப்பதாகவும் இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்து வந்தனர்.  ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத சசிகலா புஷ்பா அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்ததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

 

இதனை அடுத்து நேற்று சசிகலா புஷ்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு வீடு கொடுத்த விசயம் என்று சொல்லி இன்று முழுதும் வைரலாக ஒரு விஷயம் போய்க்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்து பதவிக்காலம் முடிந்த பிறகு எக்ஸ். எம்.பி. கோட்டா என்று ஒன்று இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு எம்.பி.க்களும் தாங்கள் இருக்கும் வீட்டினை மூன்று மாதத்திற்கு ரெனியுவல் செய்து வீட்டில் இருக்கக் கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.   

 

தமிழகத்தில் வேலைப் பழு அதிகம் இருந்ததால் நான் டெல்லி செல்லவில்லை. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வது இயல்பானது. காலி செய்யுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுப்பார்கள். நாம் இருந்தால் கையில் கொடுப்பார்கள். இல்லையென்றால் வீட்டில் ஒட்டுவார்கள். இரண்டு தடவை கடிதம் போடுவார்கள். அதை வாங்குவதற்கு நாம் அங்கு இல்லை என்றால் பொருளை எடுத்து வெளியில் வைத்து கதவைப் பூட்டுவது சாதாரண விஷயம்.

 

வீட்டில் காவலர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி யாராவது வந்து எடுத்து வைத்து விடுவார்களா. அடிக்கடி வேண்டுமென்றே ஒரு வதந்தியை பரப்பி உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதால் தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று நினைத்தேன். எங்களுக்கே டெல்லியில் சொந்த வீடுகள் இருக்கிறது. காலி செய்ய சொன்னவுடன் அதை எடுத்துக்கொண்டு போக தானே செய்ய வேண்டும். 

 

அரசியலுக்கு பெண்கள் வரவே கூடாதா? அரசியலுக்கு பெண்கள் வந்தால் அவர்களது தனிப்பட்ட விவகாரங்களைக் குறித்து தவறாகத்தான் பேசுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. கட்சி இருக்கிறது. இப்படி நீங்கள் தொடர்ந்து செய்யும் போது அதற்கு எதிராகப் புகார் கொடுக்கும் அளவிற்கு தள்ளுகிறீர்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மது போதையில் பெண் போலீசிடம் அத்துமீறல்; சசிகலா புஷ்பா மகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

bjp executive sasikala pushbha son pradeep raja case filed police

 

பாஜக நிர்வாகியான சசிகலா புஷ்பாவின் மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜா. இவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விருகம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த சாலையில் போலீசார் இரவு ரோந்துப் பணியில் இருந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் பிரதீப் ராஜா வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

 

அப்போது மது போதையில் இருந்த பிரதீப் ராஜா தனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது மட்டுமின்றி பெண் காவலரின் கையைப் பிடித்து முறுக்கியதாகச் சொல்லப்படுகிறது. அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இது குறித்து பிரதீப் ராஜா மீது மது போதையில் வாகனம் ஒட்டியதற்காக  போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் பிரதீப் ராஜா வந்த இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பெண் காவலர் ஒருவரை சசிகலா புஷ்பாவின் மகன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

“வெளியே வந்தால் நாக்கு இருக்காது” - சசிகலா புஷ்பாவின் பேச்சு; துவம்சம் செய்யப்பட்ட வீடு

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Sasikala Pushpa's house and car vandalized

 

“வீட்டை விட்டு வெளியே வரும்போது உங்களுக்கு கால் இருக்காது.. நாக்கு இருக்காது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சசிகலா புஷ்பாவின் வீடு, கார்கள் திடீரென அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அதிமுகவில் இருந்தது முதல் தற்போது பாஜகவில் இருப்பது வரை ஏகப்பட்ட சர்ச்சைகள் சசிகலா புஷ்பாவின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

 

இதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால.கணபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது, இந்த நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா பேசும்போது, "ஒன்றரை வருட திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாடத் தகுதி உள்ளவர்தான் அண்ணாமலை.

 

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அண்ணாமலைக்கு தான் மக்கள் கூட்டம் கூடுகிறது. சனாதனம் பற்றி நாங்கள் பேசுவோம். ஏனென்றால், அது தான் எங்கள் கொள்கை" எனப் பேசியிருந்தார். இது ஒருபுறம் இருக்க, தூத்துக்குடியில் நடந்த பொதுகூட்டத்தில் திமுக அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, "பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மேடை ஏறும்போது மட்டும்தான், அவரது கட்சி நிர்வாகிகளும் மேடை ஏறுவார்கள்" எனக் கிண்டலாக பேசினார்.

 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா புஷ்பா பேசும்போது, "நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது. தூத்துக்குடியில் மாற்றம் வரப்போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும்போது தூத்துக்குடியில் திமுக தோற்கப் போகிறது. பிஜேபி வெற்றி பெறப் போகிறது” எனக் கடுமையாக பேசினார்.

 

இதையடுத்து, அவர் கூட்டத்தில் பேசி முடித்த அடுத்த நாள் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பின்னர், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி நகர ஏஎஸ்பி சத்யராஜ் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சசிகலா புஷ்பாவின் வீடு, கார் உடைக்கப்பட்டதை அடுத்து, பாஜகவினர் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.