
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி இது குறித்துப் பேசுகையில், ''இன்றைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நியாயமான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொள்ளாச்சி வழக்குகளில் குற்றவாளிகளை பாதுகாத்தது அன்றைய அதிமுக அரசுதான். திமுகவினுடைய வலியுறுத்தலின் பேரிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன் ஆட்சியில் நடந்த குற்றம் என்பதால் அதிமுக வழக்கு பதிவு செய்யாமல் இருந்தது. குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் அவர்களுடைய கவனம் இருந்தது. திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து போராடியதால் தான் வழக்கை பதிவு செய்தார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நாம் எல்லோரும் சேர்ந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோமே தவிர அவர்களாக வந்து சிபிஐக்கு மாற்றவில்லை. மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நம்முடைய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதால், எதிர்கட்சிகள் எல்லாம் வலியுறுத்தியதால் சிபிஐக்கு மாற்றப்பட்டது'' என்றார்.