Skip to main content

“அரசுக்கே தெரியாமல் நடந்தது; அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” - அமைச்சர் பொன்முடி விளக்கம்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

unexpected event; Chepakkam stadium staff happy with Dhoni's action

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தமிழ், ஆங்கில வழியில் பொறியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் வழியிலான மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகத் தனது கீழ் இயங்கும் 11 உறுப்புக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்த பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் பாடப் பிரிவுகள் நிறுத்தப்படுவதாக சொன்ன அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.

 

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் படிக்கும்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூட தமிழ் வழிக் கல்வி கிடையாது. ஆங்கிலம் மட்டும் தான். இதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். அண்ணா வந்த பின் சமூகவியல் பாடப் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வந்தார். கலைஞர் வந்த பின்பு தான் அறிவியல் பாடப் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வந்து கல்லூரிகளில் தமிழைப் புகுத்தியவர் கலைஞர். அதுமட்டுமல்ல தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என உத்தரவிட்டவரும் கலைஞர் தான். இந்தாண்டு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமல்லாமல் மற்ற பிரிவுகளிலும் தமிழை புகுத்த வேண்டிய திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறோம். 

 

ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு அரசுக்கே தெரியாது. அந்த முடிவு தவறானது என்பதை உணர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். தமிழ் மொழியில் பொறியியல் கல்வி என்பதை மற்ற பிரிவுகளிலும் விரிவுபடுத்தி படிப்பதற்கு ஆவண செய்யப்படும். அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து பேசியுள்ளோம். எந்த பல்கலைக்கழகத்தில் எந்த புதிய பாடங்களைக் கொண்டு வந்தாலும், இருக்கின்ற பாடத்தை நீக்கினாலும் அரசின் செயலருக்கு அறிவித்த பின்பே செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் செயல்பட்டுள்ளார். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என அவர் சொல்கிறார். குறைவாக இருந்தாலும்  இருக்கும் மாணவர்கள் படிப்பதற்கு ஆசிரியர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். நான் சொன்னதும் அவர் அதை மாற்றிக்கொண்டார்.

 

இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று தெரிந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றினார். துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வேண்டும் என்ற சட்டத்தை இயற்றினார். அதன் காரணமாகத்தான் மாநிலக் கல்விக் கொள்கையும் அதற்காக ஒரு குழுவையும் நியமித்து மாநிலக் கல்விக் கொள்கை வெகு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

Next Story

'சண்டாளர் சர்ச்சை' - அதிரடியாக வெளியான அறிவிப்பு

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'Sandalar Dispute'-Recommendation by Tribal Commission to Tamil Govt

சண்டாளர் என்ற சமூக பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய பரிந்துரை அளித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பொதுவெளியில் பட்டியல் இனத்தவர்களின் பெயர்களை இழிவான முறையில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம். தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் 'சண்டாளர்' என்ற  வகுப்பைச் சேர்ந்த பெயரில் மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்தினர் அட்டவணையில் 48 வது இடத்தில் இந்தச் 'சண்டாளர்' என்ற சமூக பெயர் இடம் பெற்றுள்ளது.

இப்பெயரை பொதுவெளியில் நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ, ஒருவரை இழிவுபடுத்தும் நோக்கிலோ இனி அந்தச் சொல்லை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சித்து பாடல் ஒன்றைப் பாடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்த, கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் இதனைப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.