Skip to main content

“அவர் மோடியைப் போல் இருப்பது நல்லது” - அண்ணாமலையின் பேச்சிற்கு வலுக்கும் கண்டனங்கள்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

"It is better for him to be like Modi" are strong criticisms of Annamalai's speech

 

தமிழ் மொழி மேம்பாட்டிற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி கடலூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

 

இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பிய நிலையில் அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். செய்தியாளர்களை நோக்கி பேசிய அண்ணாமலை ''என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது... நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன். மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவர் சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா...நவுருங்க'' என பேசினார். (அமைச்சர் மற்றும் பத்திரிகையாளரை ஒருமையில் பேசினார்)

 

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. அண்ணாமலையின் பேச்சிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழ்நாடு பாஜக தலைவரின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது. ஊடகவியலாளர்களை காயப்படுத்தும் விதத்தில் அவர் பேசியிருப்பது வேதனையளிக்கிறது. ஊடகவியலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். ஊடகவியலாளர்கள் நம்மை கேள்வி கேட்கத்தான் இருக்கிறார்கள். ஆத்திரமூட்டும் கேள்விகளையும் கேட்பார்கள். அதற்காக நாம் ஊடகவியலாளர்களை காயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல” எனக் கூறியிருந்தார்.

 

அண்ணாமலையின் பேச்சு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டை சிதைத்து சீரழிக்கும் வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது என்பதையே அண்ணாமலையின் பேச்சு உணர்த்துகிறது. தனது செயலுக்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். இனியாவது நாகரீகமும் பண்பாடும் காத்திட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே” எனக் கூறியுள்ளார்.

 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயக்கட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியைப் போலவே பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலையின்  எதிர்கால அரசியலுக்கு நல்லது” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்