Company

அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் (RBI) அறிவிப்புக்கு மாறாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தவணைத் தொகையை செலுத்தவும், தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி செலுத்தவும் நிர்பந்தம் செய்வதைத் தடுத்து நிறுத்துவதோடு கரோனா காலமான மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாத காலத்திற்கான வட்டியைத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இதன் தொடர்ச்சியாக, இன்று ஈரோடு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி பொருளாளரும், மைக்ரோ பைனான்ஸ் டார்ச்சர் தடுப்புக்குழுவின் கன்வீனருமான எஸ்.டி.பிரபாகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விரிவான கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

Advertisment

இதுபற்றி அவர்கள் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் ஆசிர்வாத், ஸ்மைல், ஜனலட்சுமி, சமஸ்தா, பெல் ஸ்டார், அரைஸ், அட்சயா, கிராம சக்தி, எல்அண்ட்டி, மதுரா, IDFC, HDFC, சொர்ணமித்ரா, சௌத் இண்டியன் பின்காப், தாரு பைனான்ஸ், சூரியாடே, முத்தூட் பைனான்ஸ், அசாம் பேங்க், எஸ் பேங்க், எக்விடாஸ், பீஎஸ்எஸ், சிக்ஸா, மித்ரா, உஜ்ஜீவன், விருச்சம், கிராமின் கோட்டா, மகா சேமம் சிரீவி, சிரீஹரி உள்ளிட்ட ஏராளமான மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

அன்றாடம் உழைத்து ஊதியம் ஈட்டி வாழ்க்கை நடத்தும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் தங்களது குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவம் மற்றும் குடும்ப அவசரத் தேவைகளுக்காக,பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத நிலையில், ஐந்து முதல் இருபது வரையான பெண்கள் ஒரு குழுவாக இணைந்து கூட்டுப் பொறுப்பில், மேற்கண்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இவர்கள் இதற்கான தவணைத் தொகையை கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் முறையாகச் செலுத்தி வந்தனர்.

Advertisment

ff

இப்போது, கரோனா ஊரடங்கால் அவர்களுக்கு வேலையின்றி,வருமானமின்றி வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அரசும், ரிசர்வ் பேங்க்கும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்ககான நிவாரண நடவடிக்கைகளில் ஒன்றாக, அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் அனைத்து வகையான கடன் தவணைத் தொகைகளையும் செலுத்துவதற்கு மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளன.

ஆனால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் உத்தரவுக்கு மாறாக கடன் தவணைத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறும், தவணை தவறிய தொகைக்கு அபராத வட்டி செலுத்துமாறும் இப்பெண்களைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். தவணைக் தொகைகளை செலுத்தக்கோரி இவர்களைப் பல்வேறு வகைகளில் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் இப்பெண்களும், இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

ஆகவேதான் அரசு நேரிடையாக தலையிட்டு, அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளபடி இவர்களது கடன் தவணைத் தொகைகளைச் செலுத்துவதற்கு வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். தவணை தவறிய தொகைக்கு குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான ஆறு மாதங்களுக்கு அபராத வட்டி வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்சியரிடம் மனு வழங்கும் இந்நிகழ்வில், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கமாநில செயலாளர் எஸ்.சின்னசாமி, கட்சி நிர்வாகிகள்மேலும் பாதிக்கப்பட்ட பெண்களும் திரளாக வந்திருந்தனர்.