Intensive vote-gathering; Prime Minister Modi Road Show

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர், ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தற்போதைய பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அம்மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Advertisment

இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்குகிறது. இதில், பா.ஜ.க 68 தொகுதிகளிலும், ஏ.ஜெ.எஸ்.யூ 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி கட்சிகளும், புதியதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க கூட்டணி கட்சிகளும் தீவிர முனைப்பில் தேர்தலைச் சந்தித்து வருகிறது. இதனால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் அனல் பறந்து வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் (11.11.2024) முடிவடைகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் தலைநகர் பிரதமர் மோடி, இன்று (10.11.2024)ராஞ்சியில் உள்ள முக்கிய சாலை வழியாக சுமார் 5 கி.மீ. தூரம் வாகனப் பேரணியாக (ரோடு ஷோ) சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக இரண்டு இடங்களில் தேர்தல் பரப்புரைக்கான பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருந்தார். தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.