Advertisment

'இது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி' - ராமதாஸ் அதிர்ச்சி

This is an injustice done to OBCs'- Ramadoss shocked

'இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் இறுதி செய்து விட்ட நிலையில், அது கேட்காமலேயே பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இந்தியா விடுதலை அடைந்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு தான், வி.பி.சிங் அரசு, மண்டல் ஆணைய பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியது. அதன்பின்னர் 27 ஆண்டுகளாகிவிட்ட பிறகும் கூட பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையான மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்காத நிலையில், அது பற்றி ஆய்வு செய்யவும், உள் ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காகவும் தான் 02.10.2017 அன்று நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்குள் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால், அதன்பின் 13 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டும் கூட, இன்று வரைக்கும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பதவிக்காலம் ஜூலை 31&ஆம் தேதி 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு துல்லியமாக சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்தால், அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஓபிசிகளுக்கு உள் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் பணிகளை எப்போதோ முடித்து விட்டது என்பது தான் உண்மை. ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே ஆய்வறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் ஆணையம் ஒப்படைத்து விட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2,633 சாதிகள் உள்ளன. இவற்றில் வெறும் 10 சாதிகள் மட்டுமே, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் 24.95 விழுக்காட்டைக் கைப்பற்றுகின்றன; மேலும் 38 சமுதாயங்கள் 25.04 விழுக்காட்டையும், 102 சமுதாயங்கள் இன்னொரு 25.03 விழுக்காட்டையும், 506 சமுதாயங்கள் 22.32 விழுக்காட்டையும் கைப்பற்றுகின்றன.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் 97.34 விழுக்காட்டை 656 சாதிகள் கைப்பற்றிக் கொள்ளும் நிலையில் மீதமுள்ள 1,977 சாதிகளுக்கு 2.66% மட்டுமே கிடைக்கின்றன. அந்த இட ஒதுக்கீட்டையும் கூட 994 சாதிகள் பகிர்ந்துகொள்ளும் நிலையில், 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இந்த அநீதியை போக்குவதற்காக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 27% ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாகப் பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் ரோகிணி ஆணையம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆகும்.

இதை உறுதி செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்காகத் தான் ஆணையத்திற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அனைத்துப் பணிகளையும் திட்டமிட்டவாறு முடித்து விட்ட ஆணையம், அதன் இறுதி அறிக்கையை கடந்த ஜூலை மாதத்திற்கு முன்பாகவே தயாரித்து விட்டது. ஆனால், ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை என்பதால் தான் ரோகிணி ஆணையம் அதன் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோராமலேயே மத்திய அரசு மீண்டும், மீண்டும் நீட்டித்து வருகிறது.

"நீதிபதி ரோகிணி ஆணையம் காலநீட்டிப்பு கோரவில்லை. அதன் பதவிக்காலம் 2022 ஜூலை 31-ஆம் தேதி முடிவடைவதற்கு முன்பாக அறிக்கையை தாக்கல் செய்து விடும்" என்று மத்திய சமூகநீதித்துறை செயலாளர் சுப்பிரமணியம் கடந்த ஜூலை மாதமே கூறியிருந்தார். ஆனால், அதன் பிறகு கடந்த ஜூலை மாதம், நடப்பு ஜனவரி மாதம் என இருமுறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரோகிணி ஆணையம் அதன் பணிகளை முடித்து விட்டது; இப்போதும் கூட நாங்கள் எந்த பணியும் இல்லாமல் இருக்கிறோம் என்று நீதிபதி ரோகிணி ஆணைய உறுப்பினர்களில் ஒருவர் கூறியதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கும், அடுத்த ஆண்டில் மக்களவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 27% இட ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை அனுபவிக்கும் சமூகங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை பெற்றுக் கொள்வதை மத்திய அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. அதற்கான காரணங்கள் உள்ளன.

தேர்தல் கணக்குகளுக்காகவோ, இட ஒதுக்கீட்டை அளவுக்கு அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் விரும்பாது என்பதற்காகவோ, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு நீதி வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை பெறுவதில் மத்திய அரசு தாமதம் செய்யக்கூடாது. உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் தாமதம் காட்டக் கூடாது. எனவே, நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதன் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்'என தெரிவித்துள்ளார்.

OBC Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe