கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?; வெளியான தகவல்

Information released Kamal Haasan's assets are worth Rajya Sabha nomination

தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்திருந்தது.

திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் என அதிமுக வேட்பாளர்களே போட்டியிட இருக்கின்றனர். இதற்கான வேட்புமனுவை நேற்று (06-06-25) சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், மாநிலங்களவை வேட்புமனு தாக்கலின் போது கமல்ஹாசன் தெரிவித்த சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 2023-2024 கமல்ஹாசனின் வருவாய் ரூ.78.79 கோடி, அசையும் சொத்துக்கள் ரூ.59.69 கோடி, அசையா சொத்துக்கள் ரூ.245.86 கோடி, ரொக்கப் பணம் ரூ.2.60 லட்சம், உயர் ரக கார்கள் ரூ.8.43 கோடி எனத் தெரிவித்துள்ளார். அதோடு தனக்கு ரூ.49.67 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அதே போல், மற்றொரு திமுக வேட்பாளர்களான பி.வில்சனின் சொத்து மதிப்பு ரூ.56 கோடி மற்றும் கடன் மதிப்பு ரூ.1.15 கோடி எனவும், சல்மாவின் சொத்து மதிப்பு ரூ.4.50 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் சொத்து மதிப்பு ரூ.3.63 கோடி, கடன் மதிப்பு ரூ.2.69 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரையின் சொத்து மதிப்பு ரூ.4.63 கோடி, கடன் மதிப்பு ரூ.1.31 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அதிமுக வேட்பாளர் எம்.தனபால் சொத்து மதிப்பு ரூ.22.83 கோடி, கடன் மதிப்பு ரூ.3.32 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

assets Kamal Haasan nominations Rajya Sabha RajyaSabha
இதையும் படியுங்கள்
Subscribe