Skip to main content

“ரபேல், அதானி ஊழல்களால் இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது” - பாஜக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

India is reeling from Rafale and Adani Corruption ; M. K. Stalin's attack on BJP!

 

ரபேல் ஊழல், அதானி ஊழல்களால் இந்தியாவே தலை குனிந்து நிற்கிறது என்று மத்திய பாஜக அரசு மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

 

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஜூன் 12) திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

 

கேள்வி: அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்கிறாரே?

 

மு.க.ஸ்டாலின்: இதுமாதிரி நடந்து கொள்வது அதிமுகவின் கலை. அவர்களின் பாணி தான் இது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம் நடந்தது. ஜெயலலிதாவின் பெயரை வைத்துக்கொண்டு திறந்து வைத்தார்கள். நாங்கள் அதற்கு கவலைப்படவில்லை. 

 

அதே மாதிரி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை திமுக ஆட்சியில்தான் கட்டினோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு ஜெயலலிதா அந்த திட்டத்தை எதிர்த்தார். பின்னர் மெட்ரோ ரயில் திட்டம் தொடக்க விழாவின்போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள். கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திமுக ஆட்சியின்போது திறக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது. இதையெல்லாம் அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 

 

அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்த உடனே அம்மா உணவகத்தை மூடி விடுவார்கள் என பொய் பிரச்சாரம் செய்தனர். அதை இதுவரை மூடவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடப் புத்தகப் பையில் அவர்களின் ஆட்சியில் ஜெயலலிதா படமும், எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் எல்லாம் என்னிடம் வந்து, புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்களின் படங்கள் இருப்பதால் அவற்றை எல்லாம் மாற்றி விடலாம் என்றனர். என் படத்தைப் போடுவதாகவும் சொன்னார்கள். யார் படமும் போட வேண்டாம். இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றம் செய்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது. எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன் நான். இதையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 

 

கேள்வி: அமித் ஷா தமிழ்நாடு வந்தார். இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை திமுகதான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே?

 

மு.க.ஸ்டாலின்: அதை வெளிப்படையாக அவர் சொன்னார் என்றால், அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்ல முடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக்கப் போகிறேன் என்று சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024ல் பாஜகவின் பிரதமராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை, முருகன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நினைக்கிறேன். 

 

கேள்வி: கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 

 

மு.க.ஸ்டாலின்: அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம். 

 

கேள்வி: கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து... 

 

மு.க.ஸ்டாலின்: அது ஆய்வில் இருக்கிறது. 

 

கேள்வி: தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா பட்டியல் வெளியிட்டிருக்கிறாரே? 

 

மு.க.ஸ்டாலின்: பாஜக ஆட்சி இருந்தபோது எந்த சிறப்பு திட்டமும் இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக, அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்பு திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை... படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அன்றைக்கு தமிழ்நாட்டிற்கு கிடைத்ததைச் சொல்ல வேண்டுமானால் சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ்ச்செம்மொழி உயராய்வு மையம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆய்வு மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 

 

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புகளை கொண்டு வந்துள்ளது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. இன்றைக்கு ஜிஎஸ்டியில் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டியில் தமிழ்நாட்டில் இருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்கு தான் இன்றைய ஒன்றிய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன். 

 

பாஜக ஆட்சிக்கு வந்த உடன், மதுரையில் 1200 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். அதற்குப் பிறகு அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பணிகள் முடிந்து விட்டதாகச் சொன்னாரே தவிர, இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் தரவில்லை. 

 

கேள்வி: டாஸ்மாக்கில் 10 ரூபாய் ஊழல் புகார் குறித்து... 

 

மு.க.ஸ்டாலின்: அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரச்சாரங்கள். 

 

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வராததற்கு திமுகதான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லி இருக்கிறாரே? 

 

மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் இதை அறிவித்தது யார்? திமுகவா அறிவித்தது? அறிவித்தது ஒன்றிய அரசு. அவர்கள்தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியை அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல. 

 

கேள்வி: திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்... 

 

மு.க.ஸ்டாலின்: ரஃபேல் ஊழல், அதானி ஊழல் ஆகியவற்றுக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும். அதற்குப் பின் இதைப் பேசுவோம். 

 

கேள்வி: அத்திக்கடவு - அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது? 

 

ஸ்டாலின்: முடியக்கூடிய நிலையில் இருக்கிறது. விரைவில் திறக்கப்படும். 

 

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்