Advertisment

“அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணி” - திருமாவளவன் எம்.பி.

India alliance paved the way for BJP  victory says Thirumavalavan

Advertisment

நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர் என விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தோல்வி ஆகும். இதிலிருந்து இந்தியா கூட்டணி பாடம் கற்க வேண்டும். டெல்லி மாநிலத் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி உடனடியாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது. இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம். இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

Advertisment

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. தொடர் வெற்றியை சாதித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிற அதிமுக போட்டியாடாமல் பின்வாங்கியது. பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்கிற மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்கிற அய்யத்தை எழுப்புகிறது. அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்கு வெளிப்படையான வெறுப்பு அரசியலை நாதக முன்னெடுத்தது. குறிப்பாக, தந்தை பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையிலே பொது வெளியில் கொச்சைப்படுத்தியது. ஆனாலும் அதனை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்ற போக்கு அதிர்ச்சியளித்தது. அதேவேளையில், பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நாதகவின் வெறுப்பு அரசியலை வரவேற்றது. இவ்விரு கட்சிகளின் இந்தப் போக்கு அவர்களுக்கிடையிலான மறைமுக உடனபாட்டினை உறுதிப்படுத்துவதாகவே விளங்கியது. தந்தை பெரியாருக்கு எதிரான நாதக'வின் இந்த அணுகுமுறை பாஜகவின் ஃபாசிச அணுகுமுறையின் இன்னொரு வடிவமே என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

பாஜக மற்றும் சங் பரிவார்களைப் பின்பற்றியே தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் நாதக இறங்கியது. அதன்மூலம் பாஜகவின் வாக்குகளை ஈர்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அத்துடன், அதிமுகவின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் இயல்பாக பெற்றுவிட முடியுமென நாதக கணக்குப் போட்டது.ஆனால், வழக்கம்போல அந்தக் கட்சிக்கு வைப்புத் தொகையைக் கூட கிடைக்க விடாமல் செய்துள்ளனர் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள்.

இதன்மூலம், பாஜக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் சூது அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, தந்தைபெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்த சமூகநீதிக்கான மண்ணே தமிழ்நாடு என்பதை உணர்த்தி, நாதகவுக்கு மறைமுகமாகத் துணைபோன பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உரிய பாடத்தைப் புகட்டியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Delhi Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe