Advertisment

மத்திய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

India alliance parties announce struggle against the central govt

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்; பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி,வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்; எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” பிப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர் துரை முருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ முத்தரசன், சிபிஎம் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல். திருமாவளவன், காதர் மொய்தீன், ஜாவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

vck congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe