India alliance is more says Union Minister of state l murugan

ஈரோட்டில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று அந்த ரயிலை ஈரோடு ரயில்வே நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய அவர், “பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 11 லட்சம் கோடி அளவிலான வளர்ச்சித்திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் விமான நிலையங்கள், நான்கு வந்தே பாரத் ரயில்கள், மேம்பாலங்கள், சாலைகள், ஏழைகளுக்கான வீடுகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, விவசாயிகளுக்கான ரூபாய் 6000 ஆண்டுதோறும் மானியம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 800 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக ஈரோடு, தாராபுரம், பழனி மார்க்கமாக புதிய ரயில் வழித்தடம் 75 ரயில்வே ஸ்டேஷன்கள் பன்னாட்டு தளத்துக்கு வரஉள்ளன. தமிழகத்தில் மட்டும் சென்னை எக்மோர், காட்பாடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்கள் அடங்கும்ரயில் பாதை நூறு சதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே நிலையம் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. ஈரோடு நெல்லை எக்ஸ்பிரஸ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கோட்டை வரை தற்போது நீட்டிக்கப்படுகிறது.

அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, தென்காசி செல்லவும் அங்கிருந்து ஈரோடு வந்து ஜோலார்பேட்டை சென்னை செல்லவும், இது பெரிதும் வசதியாக இருக்கும். தமிழகத்தில் சென்னை -நெல்லை, சென்னை - பெங்களூர், ஈரோடு - பெங்களூர், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது உள்நாட்டிலேயே நமது பெரம்பூர் ஐ.சி.எப் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரயில்வே துறையில் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2047க்குள் இந்தியா ஒரு வளர்ந்த தேசமாக வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. நவீன் சக்தி என்ற திட்டத்தின பிரதமர் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்துகிறார். மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் பணிக்காக சுமார் 60 லிருந்து 70% நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துள்ளது. விரைவில் எலிவேட்டர் காரிடர் எனப்படும் மேம்பாலங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வசதி ஏற்படுத்தப்படும்.

Advertisment

அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதையும், பிரதமர் கலந்து கொண்டதையும் அனைவரும் வரவேற்கின்றனர். 500 ஆண்டு மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மீன் வளத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்திராயன் மூலம் ரூபாய் 600 கோடி செலவில் சந்திரனின் தென்துருவத்தை நாம் அடைந்துள்ளோம். இது எந்த நாடும் செய்யாதது. உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இந்தியாகூட்டணி உருப்படாத ஒன்று. இளைஞர் அணி மாநாடு நமத்து போன மிக்சர் என்று சில பத்திரிகைகள் கூறியுள்ளன” என்றார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்து 29 காசு திருப்பி தரப்படுகிறது? என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்கையில் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப நிதி உதவி செய்யப்படுகிறது, என கூறினார்.