Advertisment

அனல் பறக்கும் தேர்தல் களம்; தி.மு.க.வில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Important announcements in DMK for lok sabha election

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத்தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

Advertisment

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன.

Advertisment

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

Important announcements in DMK for lok sabha election

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய 21 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை நாளை (20.03.2024) காலை 10.00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படுகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தின் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் நாளை காலை வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். அதற்கு மறுநாளான 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார்.

Announcement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe