An important announcement from TVK will be released tomorrow

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் சமீபத்தில் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்த அவர் கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இதனையடுத்து த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த மாதம் 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மாநாடு தொடர்பான 21 கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்க புஸ்ஸி ஆனந்த் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாநாடு தொடர்பாகக் காவல் துறையினரின் 21 கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் பதில் மனு கொடுக்கப்பட்டது.அந்த பதில் மனுவில், “மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்படவுள்ளன. ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநிலங்களில் இருந்தும் தொண்டர் வருவார்கள்.

Advertisment

நண்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாநாடு நடைபெறும். மாலை 6 மணியில் இருந்து விஜய் பேசும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் எந்த அரசியல் கட்சித் தலைவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல் துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் திட்டமிட்டபடி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டடிருந்ந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நாளை (08.09.2024) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மதியம் 12 மணியளவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கும் தேதியை விஜய் அறிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யக் கட்சியினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.