/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eswaran_5.jpg)
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலையில் நல்ல தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை - சேலம் புதிய 8 வழிச்சாலை திட்டத்திற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து கேட்பதில் மெத்தனம் நிலவுகிறது எனவும், சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கபினி அணையில் கர்நாடக அரசு நீர் திறந்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பது கவலையாகவும், சிரிப்பாகவும் உள்ளதாகவும், சொந்த நலனுக்காக கர்நாடக அரசை பாராட்டியுள்ளார் எனவும் கூறிய அவர், இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் மக்களிடம் காமெடியனாக பார்க்கப்படுவார் என தெரிவித்தார்.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய நல்ல தீர்வு காண வேண்டுமெனவும், தங்க தமிழ்செல்வனை போல 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பங்கள் நீங்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனவும், அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை எனவும் கூறிய அவர், டாஸ்மாக்கினை மட்டுமே நம்பி அரசை நடத்த முடியாது என தெரிவித்தார். தொழிற்சாலைகள் மூடப்படுவதும், இலட்சணக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதும் தொடர்ந்து வருகிறது எனவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு, மூடப்பட்ட 50 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் தொழிற்சாலைகள் மூடலுக்கு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மட்டும் காரணமல்ல என்பதால், குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் மக்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முன்வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)