
எனக்கு நன்றாக ஹிந்தி எழுத படிக்க தெரியும் என்றும் முதலமைச்சருக்கு நான் ஹிந்தி கற்றுத் தருகிறேன் என்றும் குஷ்பூ கூறியுள்ளார்.
திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தேசிய மகளிர் ஆணைய சிறப்பு உறுப்பினர் குஷ்பூ மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய குஷ்பூ, “பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் பேசும் பொழுது தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் மண் என மிகப் பெருமையாக பேசுகிறார். ஆனால் திமுகவினர் ஹிந்தி திணிப்பு என்று மக்களை திசை திருப்புகிறார்கள். கர்நாடகத்தில் ஹிந்தி கற்றவர்கள் 65 ஆயிரம் பேர், கேரளாவில் 21 ஆயிரம் பேர், தமிழகத்தில் ஹிந்தி கற்க விண்ணப்பித்தவர்கள் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர்.
முதலமைச்சர் பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறார். டெல்லிக்கு சென்றால் ஹிந்தி கற்றுக்கொள்ள மாட்டாரா? சொல்ல முடியாது முதலமைச்சர் இப்பொழுதே ஹிந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பார். தனிப்பட்ட முறையில் இப்பொழுதே ஹிந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருப்பார். தெரியாது என்றால் சொல்லுங்கள் எனக்கு நன்றாக ஹிந்தி எழுத படிக்க தெரியும் உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சி என்று சொல்லும் மாதிரிதான் உள்ளது. உலகம் முழுவதும் ஆற்றல் மிக்கத் தலைவர் யார் என்று கேட்டால் அது மோடி தான். இது தமிழ் மண். இந்த மண்ணை காப்பாற்ற வேண்டியது எங்கள் பொறுப்பு. உங்களால் முடியவில்லையா நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும் தைரியம் பாஜகவிற்கு உள்ளது.” எனக் கூறினார்.