“துணை முதலமைச்சர் பதவியில் டம்மியாகத்தான் இருந்தேன்” - ஓ. பன்னீர்செல்வம்

I was a dummy in the post of Deputy Chief Minister O.Panneerselvam

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவ்வப்போதுஆலோசனை நடத்தி வருகிறார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள்சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் கடந்த 4 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்டோபர் 11 ஆம் தேதி (11-10-2023) மாலை 05.00 மணிக்கு நடைபெற உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கோவையில் மாநாடு நடத்தப்படும் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாங்கள்தான் அதிமுக. இரட்டை இலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சியின் போது துணை முதலமைச்சர் என்ற பதவியில் டம்மியாகத்தான் இருந்தேன். பெயரளவில், அதிகாரமில்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவி உள்ளது. பாஜக தேசிய தலைமையுடன் நட்பின் அடிப்படையில் தான் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து பேசவில்லை” எனத்தெரிவித்தார்.

admk Chennai Coimbatore Meeting
இதையும் படியுங்கள்
Subscribe