Skip to main content

அடுத்த பயணத்துக்காகக் காத்திருக்கிறேன்! உதயநிதி கடிதம்!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

 

கடந்த 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கலைஞரின் உடன்பிறப்புகளுடன் கழிந்த அந்த தருணங்கள் மனதுக்கு இதமாகவும் இன்னும் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் தருவதாக அமைந்தது என்றும், நெய்வேலியில் இருந்து சென்னை வரை கலைஞரின் உடன்பிறப்புகளை சந்தித்ததைப் போன்று அடுத்த பயணத்துக்காக இன்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கூறியுள்ளார்.
 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 


திமுக இளைஞர் அணி செயலாளராக நான் பொறுப்பேற்று முழுதாக ஏழு மாதங்கள் முடிந்துள்ளன. ‘இரண்டு மாதங்களுக்குள் 30 லட்ச இளைஞர்களை உறுப்பினர்களாக அணியில் சேர்த்தல்’ என்பதே எங்களின் முக்கியமான முதல் பணியாக இருந்தது.

 

 இதற்கிடையில். அணி நிர்வாகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புதல், நீர்நிலைகளைத் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தல், அண்ணா பிறந்தநாள் கவிதை&கட்டுரைப் போட்டிகளை நடத்துதல், புதிய உறுப்பினர்களுக்கு இயக்கம், மொழிப் போர் குறித்த கழக வரலாற்றைப் பயிற்றுவிக்கும் பாசறை கூட்டங்களை மாவட்ட வாரியாக நடத்துதல், கழகத்தின் மீதான அவதூறுகளால் மறைக்கப்படும் வரலாறை விளக்கும் ‘பொய் பெட்டி’ நிகழ்ச்சியை சமூக வலைதள தன்னார்வலர்கள் முன்னிலையில் நடத்துதல், மண்டல அளவிலான ஆய்வுகளை நடத்துதல்.. என்று பல்வேறு பணிகளின் காரணமாக உறுப்பினர் சேர்க்கை இலக்கை கொஞ்சம் தாமதமாகவே எட்டிப்பிடித்தோம்.
 

udhayanidhi stalin



 

‘இலக்கை அடைந்துவிட்டோம்’ என்று நினைத்திருக்கையில், ‘30 லட்சம் அல்ல, 50 லட்சம்’ என்று தலைவர் அவர்கள் உறுப்பினர் சேர்க்கை இலக்கை உயர்த்த, தற்போது அதைநோக்கி ஓடத்தொடங்கியுள்ளோம்.

 

நான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற சமயத்தில், உறுப்பினர் சேர்க்கை குறித்து பேச்சு வரும்போதெல்லாம், ‘உறுப்பினர் சேர்க்கையெல்லாம் சரியாகத்தான் நடக்கும். ஆனால் உறுப்பினர் அட்டைதான் முறையாக வந்து சேராது’ என்று சிலர் புகாராகவே சொன்னார்கள்.
 

 அந்த தாமதமோ, தவறோ இம்முறை நடந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனமுடன் இருந்தோம். அப்படி முதல் தவணையாக அச்சாகி வந்த சுமார் 10 லட்சம் இளைஞர் அணி உறுப்பினர் அட்டைகளைச் சம்பந்தப்பட்ட அமைப்பாளர்கள் மூலம், அந்தந்த மாவட்டங்களில் கொண்டுபோய் சேர்த்தோம்.
 

 அப்படிச் சேர்த்த இளைஞர் அணி உறுப்பினர் அட்டைகளைச் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் வழங்கும் நிகழ்வை என்னை வைத்துத் தொடங்க வேண்டும் என்று பல மாவட்டச் செயலாளர்களும் இளைஞர் அணி அமைப்பாளர்களும் விரும்பினர்.
 

 அந்த சமயத்தில்தான் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் கணேசன் அவர்களும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினரான அண்ணன் சபா ராஜேந்திரன் அவர்களும் நெய்வேலியில் நடக்கும் ஒரு திருமணத்தை நடத்திவைக்க ஏற்கெனவே தேதி வாங்கியிருந்தது நினைவுக்கு வந்தது.
 

 அந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வையும் அதே கடலூர் மாவட்டத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். 
 


நெய்வேலிக்கு கிளம்புவதற்கு முன்புதான் இந்த பயண விவரத்தைக் கடலூரின் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் செயலாளர்களான அண்ணன்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கணேசன் இருவரிடமும் தயங்கியபடியே சொன்னேன். ‘கடலூர் வாங்கத் தம்பி, கலக்கிடலாம்’ என்று அவர்களும், ஆர்வமாக அழைத்தனர்.

 


12ம் தேதி மாலை முதல் நிகழ்ச்சியாக நெய்வேலி திருமண வரவேற்பு விழா. மணமக்களின் பெற்றோர் இருவரும் கழகப் பொறுப்பில் இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து பள்ளிக்கூடம் ஒன்றும் நடத்துகிறார்கள். மணமகளின் தாத்தா, அறிஞர் அண்ணா காலத்தில் கழக சீரணிப் படையில் இருந்தவராம். 

 

இருவீட்டாரின் கழகப் பற்றையும், பெருமைகளையும் எடுத்துக்கூறி, ‘பாசிச பாஜக&அடிமை அதிமுக’ போல் இல்லாமல் சுயமரியாதையுடன், சுதந்திரமாக விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று மணமக்களை வாழ்த்தினேன்.
 

மறுநாள், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு, வடலூரில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அணியில் புதிதாகச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் உறுப்பினர் அட்டை பெற அழகாக அணிவகுத்து அமர்ந்திருந்தனர். கழக நிர்வாகிகள், இளைஞர் அணியின் நிர்வாகிகள் அமர அரங்கிற்கு வெளியே இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அங்கேயும் பெருந்திரளான கூட்டம்.
 

 புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து என்னிடம் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 
 


‘இவ்வளவு மிகப்பெரிய, எழுச்சியான நிகழ்வைக் குறுகிய கால இடைவெளியில் எம்.ஆர்.கே அண்ணன் போன்றோரால்தான் நடத்த முடியும்’ என்று பேசினேன். அவை வெறும் வாய்வார்த்தைகளல்ல. உண்மை. அண்ணன் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகள். 
 

அடுத்து அதே மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகள் பலர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணையும் விழா. மேடையில் உள்ளாட்சி பிரதிநிதிகள். எதிரே அவர்களுடன் கழகத்தில் இணையும் மாற்றுக் கட்சியினர் என பெருங்கூட்டம். 
 

‘மாநிலத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த நீங்கள் அதிலிருந்து விலகி கழகத்தில் இணைகிறீர்கள். கழகத்தின் மீது நீங்கள் வைத்துள்ள இதே நம்பிக்கையைத்தான் மக்களும் கொண்டுள்ளனர். நிச்சயம் நல்லது நடக்கும்’ என்று நான் பேசியதை, அரங்கிலிருந்த அனைவரும் தங்கள் கரவொலி மூலம் ஆமோதித்தனர்.
 

அதைத்தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்டத்தில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி.  நெய்வேலி தொமுச வளாக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் அண்ணன் கணேசன் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சபா ராஜேந்திரன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

ஒரு பெரிய கூட்டுக் குடும்ப வீட்டுக்கு வெளியூரிலிருந்து உறவினர் ஒருவர் வந்தால், எப்படி அந்த குடும்பத்தில் ஒருவராகக் கூடிக் கரைந்து விடுவாரோ அப்படி அந்த அரங்கில் நான் கரைந்துபோனதாக உணர்ந்தேன். அப்படி ஓர் எளிமையான அழகான நிகழ்ச்சியாக அதை வடிவமைத்திருந்தார் அண்ணன் கணேசன் அவர்கள். உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கான அட்டையை வழங்கி வாழ்த்திப் பேசினேன். அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
 

சென்னை வந்தபிறகு ஒருநாள் இடைவெளியில், இளைஞர் அணியினருக்கான பயிற்சிப் பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள 15ம் தேதி இரவு தருமபுரி சென்றேன். பாசறை கூட்டம் என்பது நம் கழகத் தலைவரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்வு. 
 

நான் இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு நிகழ்வையும் நடத்தி முடித்தபிறகு தலைவரிடம் சென்று அதன் விவரத்தைத் தெரிவிப்பேன். 


அப்போது, ‘அடுத்த பாசறை கூட்டம் எங்கு, எப்போது’ என்று கேட்பார். பெரும்பாலான சந்திப்புகளில் இந்த கேள்வி மட்டும் மாறாது. 
 

அதாவது மாதம் ஒரு பாசறை கூட்டம் என்பது தலைவரின் உத்தரவு. இளைஞர் அணி சார்ந்த பல வேலைகள் இருப்பதால், ‘இரண்டு மாதங்களுக்கு ஒன்று’ என்று தலைவரிடம் அனுமதி பெற்றுள்ளோம்.


16ம் தேதி காலை, பாசறையில் கலந்துகொள்ளும்முன், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் சகோதரர் மருத்துவர் செந்தில்குமார் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். சகோதரர் செந்தில்குமாரின் செயல்பாடுகள் அதிரடியாகவும் மக்களுக்குப் பெரிதும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளதில் பெருமகிழ்ச்சி. அவர் இளைஞர் அணியின் துணை அமைப்பாளர்களில் ஒருவர் என்பது எனக்குக் கூடுதல் பெருமை. அதைத்தொடர்ந்து பாசறை கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு வந்தேன். 


மிகப்பெரும் எழுச்சியுடன் வெண் சீருடையில் இளைஞர்கள் திரண்டிருந்தனர். முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் மொழிப்போர் குறித்தும், பேராசிரியர் சுபவீ அண்ணன் அவர்கள் திராவிட இயக்க வரலாறு குறித்தும் உரையாற்ற காத்திருந்தனர். 



இது எனக்கு இரண்டாவது பாசறை கூட்டம். உண்மையாக சொல்வதென்றால், மீண்டும் கல்லூரி புகும் உணர்வே ஓங்கியிருந்தது. ‘உங்களில் ஒருவனாக இருந்து, இரு ஆசிரியர்களின் பாடங்களைக் கேட்டுப் பயன்பெறவே நானும் வந்துள்ளேன்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். அதுதான் உண்மையும்கூட.
 

‘மொழிப்போர் என்பது சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது’ என்று சங்க இலக்கிய பாடலுடன் தொடங்கிய அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள், ‘மீண்டும் ஒரு மொழிப்போர் தேவை. ஆனால் இது என்றும் ஓயாத போர்’ என்று பேசி முடித்தார். மனதுக்கு நிறைவான பேச்சு.
 


சுபவீ அண்ணன் தன் உரையின் தொடக்கத்திலேயே, ‘'உங்கள் தாத்தா&பாட்டிகளில் பட்டதாரிகள் எத்தனை பேர்? கை உயர்த்துங்கள்' என்றார். ஒரு கை கூட உயரவில்லை. 'அப்பா&அம்மாவில் எத்தனை பேர் பட்டதாரிகள்' என்றதும் ஓரிரு கரங்கள் உயர்ந்தன. 'உங்களில் எத்தனை பேர் பட்டதாரிகள்' என்றதும்தான் தாமதம், கிட்டத்தட்ட 95 சதவிகித கரங்கள் உயர்ந்தன. 'இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி, திமுகவின் வெற்றி' என்றார் சுபவீ. அப்போது எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. 



நிகழ்ச்சியில் ‘மறையாச் சூரியன்’ என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து நம் தலைவர் ஆற்றிய, ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ என்று தொடங்கும் காணொலி உரை, அனைவரையும் உலுக்கி எடுத்தது. அந்த காணொலியைக் கண்ட அனைவரும் அவ்வளவு உணர்ச்சி குவியலாய் காணப்பட்டனர். 

 

பாசறையின் முடிவில் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும், பத்திரிகையாளர் அண்ணன் கோவி.லெனின் அவர்கள் எழுதிய ‘கலைஞரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?’ புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

 

மனதுக்கு நிறைவாக அமைந்த இந்த பாசறை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தருமபுரி மாவட்டச் செயலாளர் அண்ணன் தடங்கம் சுப்பிரமணி அவர்களுக்கும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கோ.சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் அன்பும் நன்றியும்.
 

அந்நிகழ்வைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கழகத்தின் மூத்த முன்னோடி, முத்தமிழறிஞர் கலைஞரால் ‘ஆர்சி’ என்று அன்போடு அழைக்கப்படும் ஆர்.சின்னசாமி அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்தேன். 
 


‘இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வேண்டும்’ என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 17வது பிரிவு நகலை 17-11&1986ல் நடந்த போராட்டத்தில் எரித்து கைதாகி தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்த 10 பேரில் இவரும் ஒருவர்.
 

‘ஒரு குறையும் இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன். கலைஞருடனான நட்பை நினைத்து ஒவ்வொரு நாளும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். என்னை நினைவுவைத்து இவ்வளவு தூரம் வந்து சந்தித்ததற்கு நன்றி’ என்றார். 



‘மொழிப்போர் தியாகிகளின் நினைவுகளைப் போற்றக் கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இந்த ஆண்டு நானும் கலந்துகொண்டேன். இது என் முதல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். அதில் உங்களைப் பற்றிப் பேசினேன்’ என்றதும் மிகவும் மகிழ்ந்தார்.
 

வாசல் வந்து வரவேற்கும்போது என் கையை பற்றிய அய்யா சின்னசாமி அவர்கள், வழியனுப்பும் வரை கையை விடவே இல்லை. அவரின் அந்த அன்பில், திராவிட இயக்கத்தின் நீண்ட வரலாற்றையும் கழக முன்னோடிகளின் தியாகங்களையும் ஒருசேர உணர முடிந்தது.
 

அடுத்து, சென்னை வரும் வழியில் தருமபுரி பெரியாம்பட்டி கிராமத்தில் இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளர் மகேஷ்குமாரின் ஏற்பாட்டில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிவைத்தேன். 


இருவண்ணக் கொடி குறித்து பேரறிஞர் அண்ணாவின், ‘கறுப்பு நிறம் என்பது சமுதாயத்தில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தும் அடையாளம். சிவப்பு நிறம், இருண்ட நிலையைப் போக்கி ஒளியை உண்டாக்கும் குறியீடு’ என்ற கூற்று அப்போது நினைவில் வந்தது. இப்படிப்பட்ட கழகக் கொடி ஏற்றுவது என்பது பெருமையான தருணம்.

 

 அடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் துவாரகாபுரம் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையை திறந்துவைத்து கழகக் கொடியேற்றிவைத்து உரையாற்றினேன். இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் செங்குட்டுவன் அவர்களுக்கும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினி செல்வத்துக்கும் நன்றி.
 

12ம் தேதி நெய்வேலியில் தொடங்கி, 16ம் தேதி இரவு சென்னை திரும்பும்வரையிலான இப்பயணத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளுடன் கழிந்த அந்த தருணங்கள் மனதுக்கு இதமாகவும் இன்னும் உழைக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் தருவதாக அமைந்தது. 
 

திருச்சி தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும், இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ., அசன் முகமது ஜின்னா, ஜோயல், பைந்தமிழ் பாரி, துரை ஆகியோருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கடலூர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ் அவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணன் சுகவனம், அண்ணன் வெற்றிச்செல்வன் அவர்களுக்கும், அண்ணன் தாமரைச்செல்வன் அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் இன்பசேகரன் உள்பட இந்தப் பயணத்தில் பங்கேற்று உதவிய கழக முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி.

தொடர்ந்து பயணிப்பதுதானே வாழ்க்கை. உடன்பிறப்புகளுடனான அடுத்த பயணத்துக்காக இன்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.