Skip to main content

'திட்டமிட்டு இந்த சதிச்செயல் நடைபெறுவதாக பார்க்கிறேன்'-சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

EPS

 

'முன்னர் பல ஆண்டுகள் அதிமுக, திமுக ஆட்சியிலிருந்த பொழுதும் யாரும் ஆதீனத்தில் தலையிடவில்லை. ஆனால் இன்று ஆட்சியாளர்களால் திட்டமிட்டு ஒரு சதிச் செயல் நடைபெறுவதாக நான் பார்க்கிறேன்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக் காலத்திலேயே நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் போலச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இன்றைக்குச் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் கலந்துகொண்டு பலபேர் தங்களது சொத்துக்களை இழந்து, விலை மதிக்க முடியாத உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில்கூட இரண்டு பேர் இறந்திருக்கிறார்கள். இது ஒரு துயரமான சம்பவம். நாங்கள் பலமுறை இந்த அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றோம். சட்டமன்றத்திலும் தெரிவிக்கின்றோம். உடனடியாக ஆன்லைன் ரம்மி தமிழகத்தில் தடை செய்வதற்குத் தேவையான சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வர வேண்டும் என அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். தமிழகத்தில் தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதையும் இந்த அரசு கட்டுப்படுத்த முடியவில்லை. அதையும் கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.

 

அப்போது செய்தியாளர் ஒருவர் 'அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?' என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,  ''நீங்களும் கற்பனையாக ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்வது. ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த கேள்வியை யார் சொல்லிக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை'' என்றார்.

 

மேலும் பேசிய அவர், ''நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 3% தான். இதிலிருந்து உங்களுக்கு நன்றாகத் தெரியும் அதிக வாக்குகளைப் பெற்ற, அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற கட்சி அதிமுக. எனவே நாங்கள் தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்கின்ற கட்சி திமுக என எல்லோருக்கும் தெரியும் அதை இப்போது ஆளுகின்ற திமுக  நிரூபணம் செய்துகொண்டிருக்கிறது. கருவூரில் நெடுஞ்சாலைத்துறையில் சாலையை அமைக்காமல் சாலை போட்டதாகப் பணத்தைப் பெற்று இருக்கிறார்கள். இதை அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு அதிமுக எடுத்துச் சென்றவுடன் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நிறைய துறைகளில் இப்படி நடந்து கொண்டிருக்கிறது.

 

காலங்காலமாக அதிமுகவும் ஆட்சியிலிருந்தது, திமுக ஆட்சியிலிருந்தது ஆனால் அப்பொழுது ஆதீனத்தில் யாரும் தலையிடவில்லை. இன்று ஆட்சியாளர்களால் திட்டமிட்டு ஒரு சதிச்செயல் நடைபெறுவதாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் திமுக ஆட்சியிலிருந்திருக்கிறார்கள் பல ஆண்டுகளாக அதிமுவும் ஆட்சியில் இருந்துள்ளது. அப்பொழுதெல்லாம் ஆதீனத்திற்குள் எந்தவித எல்லை மீறிய சம்பவங்களும் நடைபெறவில்லை. எந்த மதமாக இருந்தாலும் சரி, எந்த திருக்கோவில்களாக இருந்தாலும் சரி அந்த ஐதீகத்தின்படி நடக்க படவேண்டும். அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசாங்கம் உருவான பிறகு ஏதேதோ தவறான வழியிலேயே யாருடைய பேச்சைக் கேட்டு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது தவறான போக்கு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்