Advertisment

சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள், சந்தர்ப்பவாதிகள்! -அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ஐ.பெரியசாமி கண்டனம்!

ip

அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோரை கண்டித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், “முதலமைச்சர் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அறிக்கை விட்டு- நான் சொல்லித்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது என ஒரு தவறான தகவலை தி.மு.க. தலைவர் மக்களிடத்திலே ஏற்படுத்தி வருகிறார்” என்று, “2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டர் புகழ்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

அடிக்கடி “உரிமையாளரை” மாற்றும் “வாடகைதாரருக்கு” எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்க யோக்கியதை இல்லை.

சசிகலா, டி.டி.வி. தினகரன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தற்போது முதலமைச்சர்பழனிசாமி என்று, “பச்சோந்தி” போல் உரிமையாளரை மாற்றிய உதயகுமாரே, இந்த ஆட்சியில் ஒரு வாடகைதாரர்தான்! வாடகை செலுத்தும் உரிமையாளர்பழனிசாமிக்கு, அவர் “ஜால்ரா” அடிக்கலாம். ஆனால் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து விமர்சனம் செய்ய அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

16.3.2020 அன்றிலிருந்து எங்கள் கழகத் தலைவர் வெளியிட்ட ஆலோசனைகளை ஒன்றிரண்டை நிறைவேற்றி- மக்கள் உயிர்காக்கும் எண்ணற்ற அரிய ஆலோசனைகளைப் புறக்கணித்த மகாபாவிகளைக் கொண்ட “ஊழல் கூடாரம்” அ.தி.மு.க. ஆட்சி.

அமைச்சர் திரு. உதயகுமார், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர். ஆனால் சொந்த மதுரை மாவட்ட மக்களை கரோனாவின் பிடியில் குலை நடுங்க வைத்து விட்டு - டெண்டரில் கமிஷன் பார்க்கும் வேலையில் சென்னையில் தீவிரமாக இருக்கிறார்.

எங்கள் தலைவரின், “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் பணி அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் வீட்டிற்குள்ளேயே- ஏன், கஜானாவிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த போது, கரோனாப் பணிகளில் ஈடுபட்டவர், எங்கள் கழகத் தலைவர்.

இன்றைக்கும் கட்சி நிர்வாகிகள் முதல் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் வரை, அனைவரையும் தினமும் இப்பணிகளில் ஈடுபடுத்தி வருபவர்!

கரோனா காலத்தில்- மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் “ஒன்றிணைவோம் வா” என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது- அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப் படுத்தும் கொடுமையான அரசு, இங்குள்ள அ.தி.மு.க. அரசு. ஏனென்றால் அமைச்சர் திரு. உதயகுமாருக்கோ- முதலமைச்சருக்கோ மக்கள் பணியில் அக்கறை இல்லை.

பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை வழங்கும் அறிக்கைகளையும், மக்கள் நல உதவிகளையும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பவரே கொச்சைப் படுத்துவது என்பது, இவர் “அதுக்கு லாயக்கில்லை” என்பதைத்தான் தெரியப்படுத்துகிறது.

மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவரான முதலமைச்சரும், உறுப்பினரான திரு. உதயகுமாரும் படுதோல்வி அடைந்து, நிர்க்கதியாக நிற்கிறார்கள்.

ஜூன் 1 ஆம் தேதி, மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. ஆனால் ஜூன் 30 ஆம் தேதி, அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 2,557 பேர்.

3 பேராக இருந்த கரோனா மரணம், நேற்று மதுரையில் 32 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு தினங்களாக, தினமும் 200 பேர் கரோனாவால் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மதுரைக்கு மட்டும் தனி ஊரடங்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரிடர் மேலாண்மை உறுப்பினரின் மாவட்டத்தில் இதுதான் நிர்வாக லட்சணம் !

தமிழ்நாட்டில் ஜூன் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டோர் 23,495 பேர்தான். ஆனால் நேற்றைய கணக்குப்படி 90,167.

அதே போல் தமிழக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கையான 184, நேற்றைய கணக்குப்படி 1,201 ஆக உயர்ந்து மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கரோனா மரணம் நோய்த் தொற்றை விட வேகமாக இரட்டிப்பு ஆகிறது என்று இன்று, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 40 சதவீதம் பேர், இரு நாட்கள் கூட மருத்துவமனையில் உயிருடன் இருப்பதில்லை” என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றை ஒழிக்கும் பணியில், அ.தி.மு.க. அரசின் அரைவேக்காட்டு நிர்வாகம் இதுதான்.

மக்கள் நலனில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுவது, எங்கள் கழகத் தலைவர். ஆனால் கரோனா நோய்த் தொற்றை பரவ விட்டு- நோய்த் தொற்று - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்து- மருத்துவமனைகளில் இரு நாட்கள் கூட உயிருடன் கரோனா நோயாளிகள் இருக்க முடியாத ஒரு அபாயகரமான- அச்சமூட்டும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் திரு. உதயகுமாரும், தலைவர் முதலமைச்சர் திரு. பழனிசாமியும்தான். இந்தத் தோல்வியால் அடித்தட்டு மக்கள் வரை அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

“பொதுவாழ்வில் இருப்போரை முடக்கிப் போட அறிக்கைகளை விடுகிறார்” என்று கூறும் அமைச்சர் திரு. உதயகுமார், பொது வாழ்வு என்றால், கிலோ என்ன விலை என்று கேட்பவர். "பாரத் நெட்" டெண்டர் திட்ட ஊழல் - எங்கள் கழகத் தலைவர் கூறியது போல், இன்றைக்கு டெல்லி செங்கோட்டை வரை அ.தி.மு.க. அரசின் மானம் காற்றில் பறக்கிறது.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் சென்றது, பிறகு அவரை வேறு “டம்மி” துறைக்கு மாற்றியது, ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து, உள்ளூர் கம்பெனிகள் கலந்து கொள்ள முடியாதபடி டெண்டர் விதிகளை முறைகேடாக உருவாக்கியது என்று, ஊழலில் ருசி பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு. உதயகுமார், மத்திய அரசு, டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகும், “மீசையில் மண் ஒட்டவில்லை” என்று பேசுவது, அசிங்கத்தின்- அருவருப்பின் அடையாளம்.

இந்நேரம், வேறு தன்மானம் உள்ள அமைச்சர் இருந்திருந்தால்- இப்போதுள்ள திரு. பழனிசாமியின் வாடகை வீட்டையாவது காலி செய்து விட்டுச் சென்றிருப்பார்.

“டெண்டர் விவாகரத்தில் முகாந்திரமில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு மூக்கறுபட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றதாக” ஒரு அபாண்டமான பொய் சொல்கிறார். லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை விட்டு, புகாரில் முகாந்திரமில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க வைத்தது யார்? உடம்பெல்லாம் ஊழல்- பேசுவதெல்லாம் பொய் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. உதயகுமார் திடீரென்று அரிச்சந்திரன் வேடம் போடக்கூடாது. மதுரை மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

ஊழல் இல்லை என்று அமைச்சர் சொல்வது உண்மையென்றால், "பாரத் நெட்" டெண்டர் குறித்த கோப்புகள் அனைத்தையும் பொது வெளியில் கொண்டு வந்து என்னுடன் விவாதிக்கும் தெம்பும், திராணியும் திரு. உதயகுமாருக்கு இருக்கிறதா? குறிப்பாக தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் செயலாளர் கையெழுத்துப் போடாத அந்தக் கோப்பை எடுத்து வரத் தயாரா?

இன்னொரு அமைச்சர்! அவர் பெயர் திரு. பாண்டியராஜன். பிறப்பிலேயே கட்சி தாவும் கலையுடன் அவதரித்தவர். இனி சந்திரமண்டலத்தில் புதிதாக ஒரு கட்சி துவங்கினால் அங்கும் “துண்டு” போடக் காத்திருந்து- “தன்மானத்தை" விலை பேசுபவர். அவரெல்லாம் எங்கள் கழகத் தலைவர் விடும் அறிக்கைகளைப் பற்றி பேசுவதற்குத் தகுதி இல்லை.

ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியாதவர்- தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழை ஒவ்வொரு நாளும் படுகொலை செய்து கொண்டிருப்பவர், எங்கள் கழகத் தலைவரைப் பார்த்துப் பேச யோக்கியதை இல்லை.

“முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் அறிக்கைகளை விடுகிறார்” என்று, அவமானமாத்தை மறைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கிறார். அவரிடம் நான் கேட்க விரும்புவது; உங்கள் முதலமைச்சரின் முடிவு எடுக்கும் ரகசியம் எங்கள் கழகத் தலைவருக்கு தெரிகிறது என்று சொல்வதற்கே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என் வீட்டுச் சமாச்சாரம் அடுத்த வீட்டுக்காரருக்குத் தெரிகிறது" என்று தெருவில் நின்று புலம்பினால், அதுக்கு “அர்த்தம் வேறு” என்பதை அமைச்சர் திரு. பாண்டியராஜன் உணர வேண்டும்!

http://onelink.to/nknapp

ஆகவே அமைச்சர்கள் திரு. உதயகுமாரும், திரு. பாண்டியராஜனும் “பேட்டி” என்ற பெயரில் “பிதற்ற" வேண்டாம். பதற்றத்தில் உள்ள மக்களைப் பாருங்கள்.

எங்கள் கழகத் தலைவர் அளிக்கும் பொன்னான ஆலோசனைகளைக் கேளுங்கள். “வீடு” “வீடாக” குடியேறி வந்த பழக்க தோஷத்தில் எதைப்பார்த்தாலும் சந்தேகப்படாதீர்கள்.

கரோனா கால மக்கள் பணியில் ஒரு பிராதன எதிர்க்கட்சி- “ஒன்றிணைவோம் வா” என்று, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி மக்களின் பட்டினியைப் போக்கப் பாடுபட்டுள்ளது என்றால்- இந்தியாவிலேயே அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்! எங்கள் கழகத் தலைவர் மட்டும்தான்! நீங்கள் எல்லாம் சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள். சந்தர்ப்பவாதிகள். அரசியல் உலகம் வெட்கப்பட வேண்டிய பேர்வழிகள் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

admk i periyasamy Mafa Pandiyarajan ministers R. B. Udhaya Kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe