ADVERTISEMENT

''நான் 89லிருந்து காவிரி பிரச்சனையோடு இருக்கிறவன்... அந்த ஏக்கத்தோடு கேட்கிறேன்...'' - பேரவையில் துரைமுருகன் உருக்கம்!

11:29 AM Mar 21, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு மேகதாது அணைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும்கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் எனத் தெரிவித்து வருகிறது. அண்மையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 'மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தொழில்நுட்ப அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட எந்த அனுமதிகளையும் மத்திய அரசு அளிக்கக்கூடாது' என வலியுறுத்தி இன்று தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

பேரவையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ''கர்நாடக பிரச்சனையில் கர்நாடக அரசியல் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளனர். இங்கேயும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதிமுக தீர்மானத்தைக் கொண்டுவந்தபோதெல்லாம் திமுக எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஆதரித்து வந்தது. அதேபோல் நாங்கள் கொண்டுவந்த நேரத்தில் அவர்களும் (அதிமுக) ஆதரித்திருக்கிறார்கள். நான் எல்லோரையும் கைகூப்பி கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். நான் 89லிருந்து காவிரி பிரச்சனையோடு இருக்கிறவன். அந்த ஏக்கத்தோடு கேட்கிறேன். நமக்குள் ஆயிரம் இருக்கலாம். நீங்கள் யோக்கியனா நான் யோக்கியனா எனச் சண்டை பிடிக்கலாம். யாராக இருந்தாலும், நான் உட்பட இந்தக் காவிரி பிரச்சனையில் நீ என்ன பண்ண... நான் என்ன பண்ண... எனப் பேசுவதை விட்டுவிட வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நானே இந்தத் தவறை செய்திருக்கிறேன். என்னுடைய வாலிபப் பருவம் காரணமாக அப்படி பேசியிருக்கலாம். இப்பொழுது மெஜ்ஜூரிட்டி வந்திருக்கலாம், பொறுப்பு வந்திருக்கலாம். இனியும் காவிரி விவகாரத்தில் தோற்றோம் என்றால் வருங்கால சமூகம் நம்மைச் சபிக்கும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT