Skip to main content

“அதுலயும் நான்லாம் அப்படி சொல்றதேயில்ல” - ஆளுநர் தமிழிசை

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

"I don't say that either" - Governor Tamilisai

 

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகத்தை பொறுத்தவரையில் இந்திய ஆட்சி பணி (IAS) மற்றும் இந்திய காவல் பணி (IPS) அதிகாரிகள் நியமனம் செய்வது மற்றும் பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் உள்துறையின் கீழ் உள்ளது.

 

மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வரும் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு சட்ட ஒழுங்கை காக்கும் அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக அதிகாரம் இல்லாதது மற்றும் அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் குறுக்கீடு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசு சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அதை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் டெல்லி ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டு பலதரப்பட்ட விசாரணைகளுக்கு பின் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று (11 ஆம் தேதி) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

 

அந்தத் தீர்ப்பில், “மற்ற  யூனியன் பிரதேசங்களுக்கும் டெல்லி யூனியன் பிரதேசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டமன்றம் மூலம் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும். பொது சட்ட ஒழுங்கு, காவல்துறை மற்றும்  நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்ற வேண்டும். டெல்லி துணைநிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பதில் அளித்து பேசிய அவர், “உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்காக சில வழிமுறைகளை சொல்லியுள்ளது. அதனால் ஒவ்வொரு யூனியன் பிரதேசத்திற்கு வேறு வேறு வழிமுறைகள் உள்ளது. டெல்லி தலைநகராக உள்ளது. எனவே அதற்கென்ற சில கருத்துகள் உள்ளது. முந்தைய தீர்ப்புகள் வேறு மாதிரி வந்தது. இப்போதைய தீர்ப்புகள் வேறு மாதிரி வந்தது. எல்லாம் மக்களுக்கானது தான். நீதிமன்ற தீர்ப்புகளில் கருத்து சொல்வதற்கு தயாராக இல்லை அவ்வளவு தான்.

 

யூனியன் பிரதேசத்திற்கு சொல்லும்போது அது புதுச்சேரிக்கும் பொருந்தும்தானே என சொல்கிறார்கள். அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால் டெல்லி தலை நகரில் உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் பொருந்தாது. அதற்கென்று ஒரு வழிவகை உள்ளது. எந்த ஆளுநரும் நாங்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று சொல்வதே இல்லை. அதிலும் நான் சொல்வதில்லை. நீங்களே துணை நிலை ஆளுநருக்குத் தான் அதிகாரம் உள்ளது என சொல்கிறீர்கள். அன்பால் தான் நாங்கள் ஆண்டுகொண்டிருக்கிறோம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்