
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் நிலையில் 'ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?' என கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி சமூகவலைத்தள பக்கமான 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், 'முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை 'தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது' என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே. அது கண்ணாடி!... உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது. உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- யார் அந்த தம்பி?' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து பேசுகையில், ''நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல், குறிப்பாக கல்விக்காக ஒதுக்க வேண்டிய நிதியை தராமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் நேரடியாக இதில் பங்கேற்று தமிழ்நாடு மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக செல்லுகிறார்.
பாஜகவோடு அல்லது பாஜக அரசோடு திமுக கொண்டு இருக்கின்ற மாறுபாடு; முரண்பாடு என்பது வேறு, மாநில ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நிதி பற்றாக்குறை நெருக்கடிகளை பிரதமருடைய கவனத்திற்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற கடமை என்பது வேறு. எனவே முதலமைச்சராக தான் அவர் அதில் பங்கேற்கப் போகிறார். அதில் எந்த அரசியலும் இல்லை என்று நான் நம்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு எதிரான இந்த விமர்சனத்தை வைத்திருக்கிறார். அது அரசியல் விமர்சனம் அவ்வளவுதான். ஆனால் முதலமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு தருகின்ற நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அந்த கோணத்தில் விசிக அணுகுகிறது'' என்றார்.