மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் உரை நிகழ்த்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் தான் பாஜக வெற்றி பெற்றது என்றும், திமுக வலிமையான கூட்டணி அமைத்ததால் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது என்றும் பேசினார். மேலும் அதிமுக அரசை ஊழல்மிகுந்த அரசு என்றும் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனைக்கு ஆளும் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறினார்.
இதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ஊழலின் ஊற்றுக்கண் ஊழலுக்கு எதிராக அனல் தெறிக்கும் பேச்சாம். சாத்தான் வேதம் ஓதுகிறது. இரண்டரை ஆண்டுகள் பொய்களைப் பரப்பி வெற்றி கண்ட கூட்டமல்லவா. ருசி கண்ட பூனை, 5 வருடங்களுக்கு இன்னமும் என்னென்ன கேலிக்கூத்துகள் அரங்கேறுமோ” என்று பதிவிட்டுள்ளார். ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தயாநிதி மாறனையும், திமுகவையும் பற்றி போட்டதால் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் ஹெச். ராஜாவிற்கு எதிராக பதிவு போட்டு வருகின்றனர்.