Advertisment

“30 ஆண்டுகளாக வராத மாற்றம் இனி எப்படி சாத்தியம்” - மதிமுகவில் இருந்து விலகிய சு.துரைசாமி

publive-image

Advertisment

மதிமுக அவைத் தலைவர் துரைசாமி பொதுச்செயலாளர் வைகோவிற்கு, “தங்களின் சமீபகால நடவடிக்கைகளால் கட்சிக்கும் தங்களுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கட்சியை தாய்க்கட்சியான தி.மு.க.வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” என்று கடிதம் எழுதியிருந்தார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அவைத் தலைவர் துரைசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. மேலும், கடிதத்திற்கு வைகோவின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் துரைசாமி தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்திலேயே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளதாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அவர் இந்த கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “இரண்டு வருடமாக வராதவர் இப்போது அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்க முடியும். கட்சியில் 99.9% பேருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மதிமுகவை திமுக உடன் இணைக்கக்கூடாது என்ற முடிவில் தான் உள்ளனர். அவருக்கு இருக்கலாம். 30 வருடங்கள் நாங்கள் போராடி பயணித்து வந்துவிட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்துவிட்டோம். இதையும் கடந்து போவோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்கிறார்கள். நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். ஜனநாயக முறைப்படி கட்சியின் தேர்தல் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான இடங்களில் அமைதியாக ஒற்றுமையாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு மேல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேச நான் விரும்பவில்லை” எனக் கூறினார்.

Advertisment

இந்நிலையில் மதிமுக கழக அவைத் தலைவரான சு. துரைசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கட்சி வரவு செலவு கணக்குகளை ஒருபோதும் வைத்து ஒப்புதல் பெறவில்லை.கட்சி நிதியை முறைகேடாகப் பயன்படுத்துகிறீர்கள். இன்றைக்கு கட்சி முற்றிலும் சரிந்த நிலையில், மகனை கட்சியின் அரியாசனத்தில் அமர்த்த விரும்பும் உங்கள் நடவடிக்கையில் என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் உங்களுடன் பயணிக்க முடியாது.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிர் நீத்த உண்மைத் தொண்டர்களுக்காக கட்சியை உங்கள் காலத்திலேயே திமுகவுடன் இணைத்து விடுவது நல்லது. கடந்த 30 ஆண்டுகளாக வராத மாற்றம் இனி எப்படி சாத்தியம் என்பதற்கு காலமும், கட்சியுமே சான்று.கழகத்தோழர்களை கடந்த 30 ஆண்டுகளாக ஏமாற்றியதை போல், இனியும் ஏமாற்ற வேண்டாம் என உங்களிடம் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டு இன்று முதல் மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட எல்லா பொறுப்புகளிலும் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

duraisami mdmk vaiko
இதையும் படியுங்கள்
Subscribe