
"தம்பியின் திறமை அண்ணனுக்குத் தானே தெரியும். ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது என்ற அவருடைய திறமையை அவருடைய அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார்" என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி.
மதுரை சென்மேரிஸ் பள்ளிக் கூடத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “அமித்ஷா, துக்ளக் நிகழ்ச்சிக்காக சென்னை வருகிறார். அப்போது கூட்டணி பற்றி பேசுவாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை அவரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
டோக்கன் எப்பொழுது எந்த தேதிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறதே தவிர டோக்கன் இருந்தால்தான் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பது தவறான ஒன்று. 2009, 2010ல் இருந்து தி.மு.க. எந்தவிதப் பொங்கல் பரிசும் தரவில்லை. பின்பு தேர்தல் வருகிற பொழுது பொங்கல் பரிசு தந்தார்கள். தி.மு.க.வின் அந்தப் பரிசுத் தொகுப்பில் அரை கிலோ அரிசி, அரை கிலோ மண்டவெள்ளம் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் கொடுக்கப்பட்டது. ரூபாய் எல்லாம் வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், நாங்கள் அ.தி.மு.க. அரசின் சார்பாக, ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கோடிகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. கொடுத்த பரிசுப் பொருளில் உதயசூரியன் சின்னத்தை வைத்து விட்டார்கள். ஆனால், நாங்கள் இரட்டை இலையையும் எங்களது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டோவையோ வைக்கவில்லை.
கமல்ஹாசன், தேர்தல்வரை பேசிக் கொண்டிருப்பார். இதுவும் ஒரு படப்பிடிப்பு என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துவிட்டாலே போதுமானது. உலகமே போற்றும் ஒரு நடிகராக அவர் நமக்குத் தேவை.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதையுமே நன்மையாகச் சொன்னது கிடையாது. 9 தெரு முனைப் பிரச்சாரங்கள் இதுவரை செய்துள்ளோம். எல்லா இடங்களிலும் மக்கள் எழுச்சியாக உள்ளார்கள். தொண்டர்களும் அதைக்காட்டிலும் எழுச்சியாக உள்ளார்கள். இந்த எழுச்சியைப் பார்க்கிறபொழுது நிச்சயமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. நீங்களும் நானும் வெளியில் இருந்துதான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து வருகிறோம்.

ஆனால் அழகிரி, ஸ்டாலின் கூடவே பிறந்தவர், கூடவே வளர்ந்தவர். தம்பியின் திறமை அண்ணனுக்குத் தானே தெரியும். முதலமைச்சராக அவர் வரமுடியாது என்ற அவருடைய திறமையை அவருடைய அண்ணன் அழகிரியே சொல்லிவிட்டார். எல்லா மதத்தினரும் அ.தி.மு.க.தான் வரும் என்று நினைக்கிறார்கள். முதலமைச்சர் அனைவரையும் சந்தித்து வருகிறார். பல்வேறு தொழிலதிபர்களைச் சந்தித்து வருகிறார். நிச்சயமாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.