Skip to main content

நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்! -அன்புமணி இராமதாஸ்

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

toll plaza

 

கரோனா பரவல் அச்சத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் தரப்பினரும் வருவாய் இழந்து தவிக்கும் நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது மிகவும் வருத்தமளிக்கிறது.

 

இந்தியாவில் மொத்தமுள்ள 563 சுங்கச்சாவடிகளில் சுமார் 10 விழுக்காடு, அதாவது 48 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறையின்படி இந்தக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இப்போதுள்ள சூழலில் இந்தக் கட்டண உயர்வு ஏற்க முடியாதது.

 

ஒருபுறம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் நேரடியாகச் சாலை பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்னொரு புறம் பெட்ரோல், டீசல் மீது சாலைக் கட்டமைப்பு வரி என்ற பெயரில் இன்னொரு வரி வசூலிக்கப்படுகிறது. இவை தவிர வாகனங்களை வாங்கும் போது சாலைவரி என்பது தனியாக வசூலிக்கப்படுகிறது. ஒரு சாலையைப் பயன்படுத்த 3 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

 

கடந்த மே மாதம் கலால்வரி உயர்த்தப்பட்ட பிறகு பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 32.98 ரூபாயும், டீசல் மீது 31.83 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் தலா 18 ரூபாய் சாலை கட்டமைப்பு நிதிக்கு வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் ஒரு பேருந்து அல்லது சரக்குந்து 5 கி.மீ இயங்குவதாக வைத்துக் கொண்டால், ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.3.60 எரிபொருள் மீதான வரியாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி சென்னையிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள மதுரைக்குச் செல்வதாக இருந்தால், ஒரு சரக்குந்து 1,800 ரூபாயை எரிபொருள் வழியான சாலைவரியாகச் செலவழிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு இருக்கும் போது இன்னொருபுறம் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் வசூலிப்பதே அநீதியானது. அதுமட்டுமின்றி அந்தக் கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்துவது நியாயமே இல்லாதது.

 

http://onelink.to/nknapp

 

சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கண்மூடித்தனமாக உயரக்கூடும். கரோனா பரவல் அச்சத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக்கட்டண உயர்வும், அதனால் ஏற்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களைக் கடுமையாக பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான சுங்கக்கட்டண உயர்வைக் குறைந்தது ஓராண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.