திமுக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள நட்சத்திரப் பேச்சாளரும், திமுக எம்பி-யுமான ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி பதவி பெற்றது மற்றும் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆ.ராசாவின் பேச்சிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார்.
அவர் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கக்கடிதம் ஒன்றை அனுப்பி, வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். அவரின் விளக்கத்தைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், ‘ஆ.ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது எனஇன்று தடை விதித்து உத்தரவிட்டது’. அதேசமயம், திமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. அதில் அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால், தற்போதைய நிலையில் பிரச்சாரத்திற்குத் தடை விதித்துள்ளதாகவும், அதை எதிர்த்து தொடரவுள்ள வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.