Skip to main content

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்; பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

The High Court canceled the appointment of 'all castes can become priests'

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தில் அர்ச்சகரான 2 பேர் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில் 240 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் தமிழக அரசின் இப்புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு வந்ததால் அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கப்படவிலை. பயிற்சியை முழுமையாக முடித்த 207 மாணவர்களுக்கும் பணி நியமனத்தை வழங்க ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவை பெற்றது.

 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறந்தது. இதில் 151 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். மேலும், முதல் பேட்ஜ்ஜில் பயிற்சி முடித்த மாணவர்களில் 28 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு என விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, அர்ச்சகராக சேர இருப்பவர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகம பள்ளிகளில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.

 

அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் என்பதில் உள்ள புதிய நியமனங்களை எதிர்த்து அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. தொடர்ந்து, ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றாத கோவில்கள் குறித்த பட்டியலை தயாரிக்கவும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

இந்த தீர்ப்பை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் வரவேற்றாலும், கோவில்கள் பொதுவானவை. அவற்றை ஆகம விதிகளின் படி பிரிப்பது தவறு என்றும் குழுவில் உள்ளவர்கள் அனைத்து கோவில்களையும் ஆகம விதிகளின் படி இயங்கும் கோவில்கள் எனச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி  தங்களது அச்சத்தை தெரிவித்தனர். தொடர்ந்து, ஆகஸ்ட் 14, 2021 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதி அர்ச்சகர் நியமனங்களை வழங்கினார். தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்த 22 அர்ச்சக மாணவர்கள் உட்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணி நியமனம் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது திருச்சி ஸ்ரீரங்கம் குமார வயலூர் முருகன் கோயிலில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனம் ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 2 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதையும் ரத்து செய்துள்ளார். மேலும், நீண்ட நாட்களாக அர்ச்சகராக உள்ள மனுதாரர்களை அங்கு நியமிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்