High Court action verdict; OPS sought the Election Commission

Advertisment

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ. பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்தது.

Advertisment

High Court action verdict; OPS sought the Election Commission

இதனையடுத்து,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று (18.03.2024) அளித்த தீர்ப்பில், “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தரத்தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இடைக்கால நிவாரணமாக மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியத்தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) கட்சி சார்பாக படிவம் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.