“He is Nehru's lineage; What does he need to hike?” - Ruby Manokaran

Advertisment

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கடந்த 15 ஆம் தேதி அன்று சத்தியமூர்த்திபவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய 62 மாவட்டத் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகரன், “ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் இன்று என்னை ஆஜராக சொல்லியிருந்தார்கள். இன்று அதிகமான நிகழ்ச்சிகள் எங்களுக்கு இருந்தது. அதனால் இன்னும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தேன். கொலை செய்தே இருந்தாலும் கூட இன்னும் சில நாட்கள் வேண்டும் என்றுகேட்டால் கொடுப்பார்கள். என்னைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதைப் பார்க்கும் பொழுது மனது கஷ்டமாக இருக்கிறது. நான் என் தொழிலைக் கூட விட்டுவிட்டேன். இந்தக் கட்சிக்காக அதிகமாக வேலை பார்த்துள்ளேன். இச்செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு இதில் வருத்தம்.

சட்டமன்ற உறுப்பினராக எனக்கு இன்னும் மூன்றாண்டு காலம் இருக்கிறது. முழுக்க முழுக்க இத்தொகுதி மக்களுக்காகப் போராடுவேன். கட்சி என்ன சொன்னாலும் நான் அதற்கு கட்டுப்படுவேன்” எனக் கூறினார்.

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமைப் பயணத்தை குறித்து கிராமம் தோறும் எடுத்துச் சொல்ல5 நாட்கள்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத்துவக்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகரன், “காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எழுச்சி பெற்றுள்ளது. திருநெல்வேலியிலும் காங்கிரஸ் இயக்கம் இன்று பலமாக உள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று கிராமம் கிராமமாக பேசப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் ராகுல் காந்தி குறித்து விவாதிக்கப்படுகிறது. நேருவின் பரம்பரை அவர்; அவருக்கு அவசியம் என்ன? நம் நாட்டிற்காக நடக்கிறார். நம் மக்களுக்காக நடக்கிறார். ராகுல் காந்தி மக்களுக்காக நடப்பதை கிராமம் கிராமமாக சொல்லுவதற்கு 5 நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். ராகுல் காந்தியின் நடைபயணத்தை கிராமந்தோறும் நாங்கள் பிரச்சாரமாக எடுத்துச் செல்கிறோம்” எனக் கூறினார்.