Advertisment

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டி!

Haryana Assembly Elections; Vinesh Bhogat contest on behalf of Congress

Advertisment

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் காங்கிரசில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. முன்னதாக வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை சந்தித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இன்று (06.09.2024) முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் பேசுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு இன்று முக்கியமான நாள் ஆகும். வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை எங்கள் காங்கிரஸ் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். இது காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் பெருமையான தருணம் ஆகும்” எனத் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு பஜ்ரங் புனியா பேசுகையில், “அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு போராட்டத்திலும் காங்கிரசுடன் நிற்போம். பெண் மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பாஜகவின் பெண் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் துணை நிற்கவில்லை.ஆனால் காங்கிரஸ் எல்லா இடங்களிலும் எங்களுடன் துணை நின்றது” எனப் பேசியிருந்தார்.

Haryana Assembly Elections; Vinesh Bhogat contest on behalf of Congress

Advertisment

மேலும் வினேஷ் போகத் பேசுகையில், “காங்கிரசுக்கு நான் மிகுந்த நன்றி கூறுகிறேன். ஏனென்றால் கஷ்ட காலங்களில் மட்டுமே நம்முடையவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர அனைவரும் எங்களுடன் இருந்தார்கள். எங்கள் வலியையும் கண்ணீரையும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்கும் ஒரு சித்தாந்தத்துடன் நான் இணைந்திருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மேலும் அவர்களின் உரிமைகளுக்காகத் தெருவில் இருந்து பாராளுமன்றம் வரை போராடத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியான அகில இந்திய கிசான் காங்கிரஸின் செயல் தலைவராக பஜ்ரங் புனியா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 31 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்த வினேஷ் போகட் ஜூலானா தொகுதியிலும், ஹரியான மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி, சாம்ப்லா கிலோய் தொகுதியிலும், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன், ஹோடல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து அதிக எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

congress haryana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe