Skip to main content

டயரை நக்கியவர்கள் என பட்டம் கொடுத்தது யார்? அவர்களுடன் ஓட்டு கேட்டு வர வெட்கமாக இல்லையா? ஸ்டாலின்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

 

அரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 
 

இந்த அரூர் தொகுதிக்கு வந்து இருக்கக்கூடிய நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புவது, எப்படி நாம் ஒரு பிரச்சாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோமோ அதேபோல் இன்றைக்கு ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களும் பிரச்சாரத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அதனையும் நாம் பார்க்கின்றோம். ஆனால், பிரச்சாரத்தை நடத்துகிறார்களே தவிர அந்த பிரச்சாரத்திற்கு, இங்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்றீர்களே குழுமி இருக்கின்றீர்களே இதில் ஒரு கால்வாசி கூட்டம் கூட அங்கு இல்லை என்பதை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

 

mkstalin


 

திறந்த வேனில் போகின்றார் காலியாக இருக்கக்கூடிய ரோட்டில் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி போய்க் கொண்டிருக்கக் கூடிய காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிக்கைகளில் படங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. வாட்ஸ் அப்பில் தொலைக்காட்சிகளில் ஆதாரங்களாக செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நேற்றைக்கு நான் சேலத்தில் என்னுடைய பிரச்சாரத்தை நடத்துகின்ற நேரத்தில் தான், முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களும், சேலத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை நடத்தியிருக்கின்றார். 
 

அப்படி நடத்திய நேரத்தில். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அங்கு என்ன பேசி இருக்கின்றார் என்று சொன்னால், எம்.ஜி.ஆர் பற்றி பேசி இருக்கின்றார். மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை பற்றி பேசி இருக்கின்றார். நான் கேட்க விரும்புவது எம்.ஜி.ஆர் யை பற்றி ஜெயலலிதாவை பற்றி இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசுகின்றாரே, பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது? என்ற இந்தக் கேள்வியைத் தான் நான் கேட்க விரும்புகின்றேன்.
 

காரணம் இந்த இருவரும் அ.தி.மு.க என்ற அந்தக் கட்சியை இவரிடத்தில் ஒப்படைத்து விட்டு மறைந்து விட்டார்கள், என்று எடப்பாடி பேசியிருக்கின்றார். அதாவது, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அ.தி.மு.க என்ற கட்சியை இவரிடத்தில் விட்டுவிட்டு போயிருக்கிறார்களாம். அதை இவர் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாராம். இப்படி நேற்றைக்கு அவர் பேசியிருக்கிறார். 

 

mkstalin



நான் சொல்ல விரும்புவது, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் தெய்வமாக இன்றைக்கு வணங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அ.தி.மு.க-வை இன்றைக்கு, அடகு கடையில் அடகு வைத்திருக்கிறார்கள். அமித்ஷாவிடம் கொண்டு சென்று அடகு வைத்திருக்கின்றார்கள். நான் சொல்கின்றேன் மார்வாடி கடையில் அடகு வைத்தால் கூட மீட்டு விடலாம். ஆனால், அமித்ஷாவிடம் சென்று நீங்கள் அடகு வைத்து இருக்கின்றீர்களே அதை மீட்கவே முடியாது என்ற ஒரு நிலைதான் இன்றைக்கு அந்தக் கட்சிக்கு உருவாகி இருக்கின்றது.
 

என்ன காரணம் என்றால், ஏன் அடகு வைத்திருக்கிறார்கள் என்றால் என் மீது ஒரு கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது, ஒரு வழக்கு என் மீது வந்திருக்கின்றது, அந்தக் கொலைக் குற்றத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று, கெஞ்சி கூத்தாடி இன்றைக்கு அ.தி.மு.க-வை கொண்டு சென்று அமித்ஷாவிடத்தில் அடகு வைத்து இருக்கின்றார்கள்.
 

நான் கேட்க விரும்புவது, அம்மையார் ஜெயலலிதா அவர்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித்தீர்த்து பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் செய்து ஒரு புத்தகத்தை எழுதி அ.தி.மு.க-வின் கதை என்ற தலைப்பில் அந்த புத்தகத்தை வெளியிட்டவர் யார் மதிப்பிற்குரிய பெரிய ஐயா அவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், அவர்தான் அந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றார். 


 

mkstalin



எனவே ஜெயலலிதாவை திட்டித்தீர்த்து புத்தகத்தை வெளியிட்டு இருக்கக்கூடிய பெரியய்யாவோடு இன்றைக்கு கூட்டணி வைத்திருக்கிறார் என்று சொன்னால், எப்படி எடப்பாடி அவர்கள் ஜெயலலிதா வழியில் நடப்பார்? மோடி வழியில் இன்றைக்கு எடப்பாடி நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இதே ஜெயலலிதா அவர்கள் என்ன சொன்னார், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மோடி அன்றைக்கு பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன சொன்னார் மோடியா இந்த லேடியா? என்று கேட்டார். அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர் ஜெயலலிதா அவர்கள். 
 

ஆனால் இன்றைக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தக் கட்சியை ஒரு ஆட்சியை இன்றைக்கு பி.ஜே.பி யிடம் அடமானம் வைத்து இருக்கின்றீர்களே? என்ற இந்தக் கேள்வியைத் தான் நான் கேட்கின்றேன். அதுமட்டுமல்ல, இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவிற்கு நாங்கள் மெகா கூட்டணி அமைத்து இருக்கின்றோம் என்று எடப்பாடி சொல்லுகின்றார்.
 

உண்மைதான் இவ்வளவு மோசமானவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு கூட்டணி அமைத்து இருக்கின்றார்களே எங்காவது "நாற்றம் அடித்தால் கூட நாம் திரும்பிப் பார்ப்போம்" எங்கிருந்து நாற்றம் வருகின்றது என்று. அதுபோல்தான் மெகா கூட்டணி என்று ஒரு மோசமான கும்பல் கூட்டணி அமைத்து இருக்கின்றது. அதைத்தான் இன்றைக்கு எடப்பாடி சூசகமாக சொல்லுகின்றார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது வெற்றி பெற்றால் தான் தமிழகம் வளர்ச்சி பெற முடியும் என்று, சொன்னவர் யார் என்று கேட்டால் எடப்பாடி. 
 

mkstalin


 

நான் கேட்கின்றேன் சொல்வதற்கு அவர்கள் வெட்கப்படவில்லையா இப்பொழுதே நீங்கள் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றீர்கள். தமிழகம் என்ன வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றதா? 
 

அது மட்டுமல்ல இன்னொரு கேள்வியை கேட்டிருக்கின்றார். மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்று இருந்தார்களே அப்பொழுது என்ன செய்தார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கின்றார். தி.மு.க-வை பார்த்து என்ன செய்தீர்கள், என்று கேட்கிறீர்களே? நான் அவரைப் பார்த்து கேட்கின்றேன், நாங்கள் என்ன செய்யவில்லை? அதை நீங்கள் சொல்லுங்கள்.
 

அதற்குப் பிறகு நான் விளக்கம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இதே பிரதமர் மோடி அவர்கள், மெட்ரோ ரயில் திட்டத்தை வந்து திறந்து வைத்தார். அந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது யார்? தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தான். நான் இன்னும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் நிதியை ஒதுக்கி அதன் பிறகு அந்த நிதி போதுமானதாக இருக்கவில்லை. எனவே, ஜப்பான் நாட்டின் நிதியை பெற வேண்டும் என்று சொல்லி துணை முதலமைச்சராக இருந்த என்னை ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். நான் ஜப்பானிற்கு சென்று அங்கே இருக்கக்கூடிய வங்கி அதிகாரிகளை சந்தித்து, பெறவேண்டிய நிதிகளை பெற்று அதற்குப் பிறகு அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி ஏறக்குறைய 70 முதல் 75 சதவிகித பணிகளையும் முடித்து விட்டு, அதனை விரைவுபடுத்தி வேகப்படுத்தி திறப்பு விழா நடத்துவதற்கு முன்பு தேர்தல் வந்த காரணத்தால் அது தடைபட்டு போனது. இதற்கிடையில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வருகின்றார்கள் வந்தவுடன் என்ன சொன்னார் தெரியுமா? மெட்ரோ ரயில் திட்டம் என்பது ஒரு வேஸ்டான திட்டம். எனவே, நான் மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வரப்போகிறேன் என்று, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், இன்றைக்கு அந்த மெட்ரோ ரயில் திட்டத்தை ஏதோ தாங்கள் தான் நிறைவேற்றுவது போல் ஒரு நாடகத்தை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
 

அதேபோல் இந்த தருமபுரி மாவட்டம், பக்கத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்டம் குடிநீருக்காக எவ்வளவு தூரம் அல்லல்படக்கூடிய ஒரு கொடுமை. இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் என்ன பிரச்னை இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். எனவே, அந்த குடிநீரால் எந்தெந்த நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு அவஸ்தைக்கு உள்ளாகி, இந்த இரண்டு மாவட்டத்தின் மக்கள் ஆளானார்கள் என்பதை நீங்கள் மறந்து விட முடியாது. எனவே அந்தப் பிரச்னையை போக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது 1, 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்றிக் காட்டிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாரும். நான் துணை முதலமைச்சராக இருந்த நேரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் இந்த மாவட்டத்தின் பக்கத்தில் இருக்கக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் மாதத்திற்கு நான்கு முறை ஐந்து முறை நேரடியாக வந்து ஆய்வு நடத்தி அந்தப் பணியை எவ்வளவு வேகமாக நடத்திட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டோம் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அதேபோல் சேலத்தில் இருக்கக்கூடிய புதிய ரயில்வே மண்டலம் யாரால் வந்தது? எங்களால் வந்தது. தங்க நாற்கரச் சாலைகள் பாலங்கள் யாரால் வந்தது? திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியால் வந்தது. ஆகவே, மத்திய அரசோடு இன்றைக்கு நீங்கள் நல்லுறவு வைத்திருக்கின்றீர்கள். நான் இப்பொழுது சாம்பிளுக்காக ஒரு நான்கைந்து திட்டங்கள் சொன்னேன். இதுபோல் இந்த மத்திய அரசை நாங்கள் பயன்படுத்தி அ.தி.மு.க ஆட்சியின் சார்பில் இந்தந்த திட்டங்கள் கொண்டு வந்து சேர்த்து இருக்கின்றோம் என்று உங்களால் சொல்ல முடிகிறதா? முடியாது.
 

நான் கேட்கிறேன். கஜா நிவாரணம் வாங்க முடிந்ததா? நீட் தேர்வு ரத்து செய்ய முடிந்ததா? பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் அமைச்சரவையில் தீர்மானம் போடுகின்றீர்கள், தீர்மானத்தை கவர்னர் இடத்தில் கொடுக்கின்றீர்கள். இதுவரையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்களா? நீட் தேர்வு என்பது என்ன ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடிய மாணவர்கள் அவர்கள் மருத்துவ படிப்பிற்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையை உருவாக்கக்கூடிய ஒரு நிலையில் அந்த நீட் தேர்வு வந்துள்ளது. எனவே, அதை அறவே ரத்து செய்யப்பட வேண்டும். அது தேவையில்லை என்று சொல்லி தொடர்ந்து நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்பி வைக்கின்றோம், அனுப்பிய தீர்மானத்தின் மீது ஏதேனும் நடவடிக்கையை இந்த ஆட்சி எடுத்துள்ளதா? இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்கின்ற முயற்சியில் இந்த ஆட்சி ஈடுபடவில்லை, மேகதாது அணையை தடுக்க முடிந்ததா? அதையும் தடுக்க முடியவில்லை. எதையும் செய்ய முடியவில்லை, பிறகு எதற்காக நீங்கள் பி.ஜே.பி கட்சியோடு கூட்டணி சேர்ந்து இருக்கின்றீர்கள்? ஒரே ஒரு லட்சியம் தான், ஜெயிலுக்குப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு கூட்டணி சேர்ந்து இருக்கின்றது என்பதே தவிர வேறல்ல.


 

mkstalin



அதுமட்டுமல்ல விழுப்புரத்தில் நம்முடைய பெரிய ஐயா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகின்ற பொழுது ஒரு செய்தியைச் சொல்லி இருக்கின்றார். மக்கள் எந்த வகையிலும் முகம் சுளிக்காதவாறு ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. யார் சொல்லுகின்றார் பெரிய ஐயா சொல்லுகின்றார். இவர் பேசிய பேச்சை பார்த்து மக்கள் தான் இப்பொழுது முகம் சுளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதே பெரிய ஐயா என்ன சொன்னார் என்றால், பணம் கொடுத்து முதலமைச்சர் பதவியை குத்தகைக்கு எடுத்திருக்கிறார் என்று. சொன்னது யார்? பெரிய ஐயா அவர்கள். ஆனால் இப்பொழுது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக செஞ்சோற்றுக் கடன் என்று சொல்வார்களே அந்த கடனுக்காக எடப்பாடி ஆட்சியை புகழக்கூடிய ஒரு புலவராக பெரிய ஐயா இன்றைக்கு மாறி இருக்கிறாரே தவிர வேறல்ல.
 

பொருந்தாத கூட்டணி, மக்கள் விரும்பாத கூட்டணியை இன்றைக்கு பா.ம.க வைத்திருக்கின்றது. நான் இன்னும் சொல்லுகின்றேன், பா.ம.க தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை அதை நாங்கள் வெளிப்படையாக பார்க்கின்றோம். அடுத்து சின்ன ஐயா, டாக்டர் அன்புமணி அவர்கள் அவர் எப்பொழுதும் பார்ப்பதற்கு கம்பீரமாக கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பார். ஆனால், இப்பொழுது அவர் முகத்தைப் பாருங்கள் அந்த கம்பீரமும் இல்லை - கவர்ச்சியும் இல்லை - வேகமும் இல்லை - துடிப்பும் இல்லை.
 

ஏனென்றால், அடுத்து நான் தான் முதலமைச்சர். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியவர். ஆனால், இன்றைக்கு அவரின் நிலை என்ன? டயரை நக்கினவர்கள் என்று சொன்னது யார் நாங்களா? எடப்பாடியை ஓ.பி.எஸ்ஸைப் பார்த்து டயரை நக்கியவர்கள் என்று பட்டம் கொடுத்தது யார்? அன்புமணி. அந்த டயர் நக்கிகள் பக்கத்தில் நின்றுகொண்டு ஓட்டு கேட்டுக்கொண்டு வருகின்றீர்களே வெட்கமாக இல்லையா? இதுதான் நான் கேட்கின்ற கேள்வி. இவ்வாறு பேசினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.