தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டபோது, தவறுதலாக நடிகை ஒருவரின் கணக்கை டேக் செய்த நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டார் பட்டேல் சமுதாயத் தலைவர் ஹர்தீக் பட்டேல்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் ஹர்தீக் பட்டேல். பட்டேல் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கோரி மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர். அதேயளவு நெருக்கடியை குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் தந்து, பா.ஜ.க. அரசை பின்னடையச் செய்தவர்.

Advertisment

இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், ’எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒரே தலைமைக்குக் கீழ் ஒன்றிணைய வேண்டும். ஆளும் அதிகார வர்க்கத்தை வீழ்த்துவதற்கு அதைத் தவிர வேறு வழி நமக்கில்லை’ என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் நடிகை மம்தா மோகன்தாஸை டேக் செய்திருந்தார். இதைக் கண்ட நெட்டிசன்கள் மம்தா பானர்ஜிக்கு பதிலாக மம்தா மோகன்தாஸை டேக் செய்துவிட்டீர்கள் என கிண்டலடிக்கும் விதமாக பதிலளித்திருந்தனர்.